ADDED : ஜூன் 04, 2024 07:33 PM

ஊட்டி: நீலகிரி லோக்சபா தொகுதியில் ராஜா வெற்றிபெற்றதை அடுத்து அவருக்கு தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.
நீலகிரி லோக்சபா தொகுதிக்கு 23 சுற்றுகளாக ஓட்டு எண்ணிக்கை நடந்தது. நீலகிரி லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்தில் நடந்தது. தேர்தல் பொது பார்வையாளர் மஞ்சித் சிங் பரார் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கட்சி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டது. தொடர்ந்து, ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவிநாசி (தனி), பவானிசாகர் ஆகிய தொகுதிகளுக்கு அமைக்கப்பட்ட அறைகளுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்து செல்லப் பட்டது. அந்தந்த தொகுதிக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. 5 சுற்று வரை ஓட்டு எண்ணிக்கை தாமதமாக நடந்தது. தொடர்ந்து, ஒவ்வொரு சுற்று ஓட்டு எண்ணிக்கை குறிப்பிட்ட நேரத்திற்கு முடிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஓட்டு எண்ணிக்கை துவங்கிய முதல் சுற்றிலிருந்து தி.மு.க., வேட்பாளர் ராஜா தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். பா.ஜ., வேட்பாளர் முருகன் இரண்டாவது இடத்தில் இருந்தார். மூன்றாவது இடத்தில் அ.தி.மு.க., நான்காவது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயகுமார் இடம் பெற்றார். மாலை 5:30 மணியுடன் ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. தி.மு.க., வேட்பாளர் ராஜா வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் அதிகாரி வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார்.