'ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை': ராஜகண்ணப்பன் விளக்கம்
'ரெட்டியார் சமூகம் குறித்து குறைவாக பேசவில்லை': ராஜகண்ணப்பன் விளக்கம்
ADDED : ஜூன் 28, 2024 04:28 AM

சென்னை: சட்டசபையில், கடந்த 25ம் தேதி மாலை, மானிய கோரிக்கை விவாதத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதில் அளித்த போது, அமைச்சர் நேரு, சபாநாயகர் அப்பாவு குறித்து கூறிய சில கருத்துகள், சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.
ஆனால், அவரது பேச்சு நேரடியாக ஒளிபரப்பானதால், ரெட்டியார் சமுதாயம் குறித்து தவறாக பேசியதாக தகவல் பரவியது.
இது தொடர்பாக, நேற்று அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டசபையில் அளித்த விளக்கம்:
சட்டசபையில் அன்று பேசும் போது, ரெட்டியார் சமூகம் குறித்து பேசியதாக, தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர். எந்த சமூகம் குறித்தும் குறிப்பாக பேசவில்லை. அவர்கள் தங்களை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
முதல்வருடன் கலந்து பேசி அறிவிப்பு வெளியிடப்படும். எந்த சமுதாயம் குறித்தும், குறிப்பாக ரெட்டியார் சமூகம் குறித்து, நான் குறைவாக எதுவும் பேசவில்லை. சமுதாய பிரச்னையில் நாம் போகக்கூடாது என்பதில், அரசு உறுதியாக உள்ளது.
நாம் அனைவரும் ஒன்று என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். நான் சமுதாயம் குறித்து பேசியதாக, யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
சபாநாயகர் அப்பாவு: ஏற்கனவே அமைச்சர் கூறியதை, சபைக்குறிப்பில் இருந்து நீக்கி விட்டேன். அமைச்சர்கள் பதிலுரை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அமைச்சர் பேசிய வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பரவின. அந்த வார்த்தை மனம் புண்படும்படி இருக்கும். யாருடைய மனதையும் புண்படுத்த நினைக்கவில்லை என்று கூறுங்கள்.
அமைச்சர் ராஜகண்ணப்பன்: ஜாதி, பேதமற்ற சமுதாயம் என்பதே நம் கொள்கை. யாருடைய மனதையும் புண்படுத்துவது கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.

