தேவையற்ற கோஷங்கள் எழுப்ப பா.ம.க.,வினருக்கு ராமதாஸ் தடை
தேவையற்ற கோஷங்கள் எழுப்ப பா.ம.க.,வினருக்கு ராமதாஸ் தடை
ADDED : பிப் 21, 2025 06:47 PM
சென்னை:'கும்பகோணத்தில் நாளை நடக்கும் வன்னியர் சங்க மாநாட்டில், தேவையற்ற கோஷங்களை எழுப்ப வேண்டாம்' என, பா.ம.க., தொண்டர்களுக்கு அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்சியினருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
வன்னியர் சங்கம் சார்பில், கும்பகோணம் அருகே தாராசுரத்தில், நாளை சோழ மண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடக்கவுள்ளது. சமூக நீதி, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமய, சமுதாய நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கி, அரசின் கவனத்தை திருப்புவதற்கான முயற்சியே இந்த மாநாடு.
மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு தேவையான இருக்கைகள், குடிநீர், கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. சமய, சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவுள்ளன.
தமிழகத்தில் சமூக நீதி, சமூக ஒற்றுமை, நல்லிணக்கத்திற்காக, கடந்த 45 ஆண்டு காலங்களில் ஏராளமான பணிகளை செய்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தில் நடக்கும் மாநாடு, தமிழகத்தின் சமூக நீதி வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.
மாநாட்டுக்கு, பா.ம.க.,வினர் குடும்பத்துடன் அணி திரண்டு வருவோர், பாதுகாப்பு முக்கியம் என்பதால், முன்கூட்டிய புறப்பட்டு வர வேண்டும். வரும் வழியில் அமர்ந்து சாப்பிடக்கூடாது; தேவையற்ற கோஷங்களை எழுப்பக்கூடாது. பா.ம.க.,வை சீண்டும் செயல்களில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிர்வினையாற்றாமல் கடந்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

