ADDED : ஜூலை 16, 2024 02:07 AM

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பீஹார் பெண் பக்தர்களை தள்ளி விட்டதை தட்டி கேட்ட பக்தரை கோயில் ஊழியர்கள் சரமாரியாக தாக்கினர்.
பீஹாரைச் சேர்ந்தவர் நிகில்குமார் 29. இவர் உறவினர்களுடன் திருப்பூரில் பல ஆண்டுகளாக சொந்தமாக தொழில் செய்கிறார். நிகில்குமார், உறவினர்கள் 28 பேருடன் நேற்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வந்தார். நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் கோயில் ஊழியர்கள் சிலர் பெண் பக்தர்களை முதுகில் கைவைத்து தள்ளி விட்டனர். இதுகுறித்து தட்டி கேட்ட நிகில்குமார் கோயில் ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தார். அங்கு சென்ற போலீசார் நிகில்குமார் மற்றும் உறவினர்களை அழைத்து சென்று விசாரித்தனர்.
அப்போது ஆத்திரமுற்ற கோயில் ஊழியர்கள் நிகில்குமாரை சரமாரியாகத் தாக்கினர். இதில் நிகில்குமாருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமேஸ்வரம் கோயில் போலீசார் விசாரிக்கின்றனர்.
இக்கோயிலுக்கு 60 சதவீதம் வட மாநில பக்தர்கள் தான் வருகின்றனர். மனித நேயமின்றி இவர்களை குறி வைத்து தாக்குவதால் கோயிலுக்கு அவப்பெயர் ஏற்பட்டு புனிதமும் சீரழிந்து விடும்.
ஹிந்து அறநிலையத்துறை ஆணையர் விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

