பாக்கெட்டில் பொருள் கோரி ரேஷன் ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
பாக்கெட்டில் பொருள் கோரி ரேஷன் ஊழியர்கள் 'ஸ்டிரைக்'
ADDED : செப் 06, 2024 01:40 AM
சென்னை:சரியான எடையில், தரமான உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து வழங்குவது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக நியாய விலை கடை பணியாளர் சங்க ஊழியர்கள், நேற்று மாநிலம் முழுதும் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
இதனால், சென்னை, காஞ்சிபுரம் தவிர்த்த மற்ற மாவட்டங்களில், ரேஷன் பொருட்கள் வாங்க, கார்டுதாரர்கள் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து, அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன், தலைவர் ஜெயச்சந்திரராஜா கூறியதாவது:
ரேஷன் கடைகளில், பிற மாநிலங்களை சேர்ந்த கார்டுதாரர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதற்காக கடைகளுக்கு கூடுதலாக, 10 சதவீத பொருட்களை அனுப்ப வேண்டும். எடை பிரச்னையை தடுக்க, அனைத்து கார்டுதாரர்களுக்குமான பொருட்களை, சரியான எடையில் பாக்கெட்டில் அடைத்து தர வேண்டும்.
கட்டுப்பாடற்ற மளிகை உள்ளிட்ட பொருட்களை விற்க கட்டாயப்படுத்த கூடாது. லாரிகளில் எடுத்து வரும் பொருட்களை கடைகளில் இறக்கும் போது, ரேஷன் ஊழியர்களிடம் இறக்கு கூலி வசூலிக்க கூடாது.
ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, பல முறை வலியுறுத்தியும் ஏற்கப்படவில்லை. எனவே, இந்த போராட்டத்திற்கு பின், கோரிக்கைகளை அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.