ADDED : ஏப் 27, 2024 12:47 AM
தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, உணவு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்த கடைகள், சென்னை மற்றும் புறநகரில் காலை, 8:30 முதல் பகல், 12:30 வரையும்; பிற்பகல், 3:00 முதல் மாலை, 7:00 மணி வரையும் செயல்படுகின்றன.
மற்ற மாவட்டங்களில் காலை, 9:00 முதல் பிற்பகல், 1:00 மணி வரையும்; பிற்பகல், 2:00 முதல் மாலை, 6:00 மணி வரையும் செயல்படுகின்றன. எப்போதும் இல்லாத வகையில், இந்த கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால், மக்கள் குறிப்பாக, முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்க, 50 வயதை கடந்தவர்கள் தான் அதிகம் வருகின்றனர்.
அவர்களில் பலர் வெயிலில் வரிசையில் நின்று பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். எனவே, சென்னையில் ரேஷன் கடை வேலை நேரத்தை, தற்காலிகமாக பகல் 12:30க்கு பதில், 11:00 மணியாக குறைக்குமாறும்; மற்ற பகுதிகளிலும், இதே போல் மாற்றம் செய்யுமாறும் கடை ஊழியர்களும், கார்டுதாரர்களும், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

