ADDED : ஜூன் 02, 2024 11:18 PM
ராமநாதபுரம், : ரேஷன் கடை அனைத்து பணியாளர்கள் சங்கமான 'டாக்பியா' சார்பில் கோரிக்கைளை வலியுறுத்தி இன்று (ஜூன் 3ல்) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடக்கிறது. கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் ஜூலை 8 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இருப்பு குறைவிற்கு அபராதத்தை இரு மடங்காக உயர்த்துவது, எடை குறைவாக பொருட்கள் வழங்குவது, கிடங்கில் நடக்கும் ஊழல் மற்றும் இயந்திர பழுதுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்குவது, இறக்கு கூலி என்ற பெயரில் தலைவிரித்தாடும் மாமூல் போன்றவற்றை கண்டித்து இன்று ஒருநாள் ரேஷன் பணியாளர்கள் அனைவரும் விடுப்பு எடுத்து அடையாள வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கிருஷ்ணன், தலைவர் முத்துராமலிங்கம் கூறியதாவது: தமிழகத்தில் 4451 தொடக்க, நகர கூட்டுறவு சங்கங்களில் 23 ஆயிரத்து 503 முழுநேர ரேஷன் கடைகளும், 9565 பகுதி நேர கடைகளும் செயல்படுகின்றன. இதில் 30 ஆயிரம் பணியாளர்கள் இன்று போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 132 சங்கங்களில் 480 கடைகள் செயல்படுகின்றன. இதில் பணிபுரியும் 550 பேர் இதில் பங்கேற்பர். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநில மையத்தின் முடிவின் படி ஜூலை 8 முதல் தொடர் வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.