18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி., ரத்து
18 வயது ஆகாதவர்கள் வாகனம் ஓட்டினால் ஆர்.சி., ரத்து
ADDED : மே 30, 2024 05:25 AM

சென்னை : 'பதினெட்டு வயதுக்கு குறைவானவர்கள், பைக், கார் உள்ளிட்ட வாகனம் ஓட்டினால், ஜூன் 1 முதல், ஆர்.சி., ரத்து செய்யப்படும்' என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாலை விபத்துக்களை குறைப்பதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் புதிய அம்சங்களை சேர்த்து, மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. சாலை விபத்துக்களை குறைப்பதோடு, ஓட்டுனர் உரிமம் வழங்குவதை முறைப்படுத்துதல், விதிமீறலுக்கு அபராதம் அதிகரிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவுச்சான்று ரத்து செய்யப்படும் என, மத்திய போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஜூன் 1 முதல் புதிய ஓட்டுனர் உரிம விதிகள் அமலுக்கு வருகின்றன. அதன்படி, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்.
மேலும், புகை வெளியீடு விதிகளை கடுமையாக்கி, அதிக புகையை வெளியிடும், ஒன்பது லட்சம் பழைய அரசு வாகனங்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும். அதிவேகத்துக்கான அபராதம், 1,000 முதல் 2,000 ரூபாய் வரை இருக்கும்.
அதேநேரம், 18 வயதுக்கு உட்பட்டோர் மோட்டார் வாகனம் ஓட்டினால், 25,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அவர் ஓட்டி வந்த வாகனத்தின் ஆர்.சி., எனப்படும், பதிவுச்சான்று ரத்து செய்யப்படும். 25 வயது வரை, அவருக்கு வாகன ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் உத்தரவுப்படி, தமிழகத்திலும் போக்குவரத்து புதிய சட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம். இருப்பினும், இந்த புது உத்தரவு குறித்து, தமிழக அரசு இன்னும் இறுதி செய்யவில்லை' என்றனர்.