நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்
நேருக்கு நேர் விவாதத்திற்கு தயாரா? தங்கம் தென்னரசுக்கு தங்கமணி சவால்
ADDED : ஜூலை 24, 2024 11:10 PM
சென்னை:'அமைச்சர் தங்கம் தென்னரசு, உதய் மின் திட்டம் குறித்தும், மின் வாரியத்தின் நஷ்டம் குறித்தும், நேருக்கு நேர் விவாதிக்க தயாரா' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடந்த மூன்று ஆண்டுகளில், மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திய பின்னும், தமிழக மின் வாரியம் நஷ்டத்தில் இயங்குகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில் இருந்து, மின் வாரியத்தில் என்ன நடந்தது என்பதையும், என்ன நடக்கிறது என்பதையும், அவர் இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளது புரிகிறது.
உதய் மின் திட்டத்தை, மாநில அரசு ஏற்று கையெழுத்திட்டதால், மின் பகிர்மான கழகத்தின் கடன் சுமை குறைக்கப்பட்டது. அதிக வட்டிக்கான கடன் திரும்ப செலுத்தப்பட்டதால் ஏற்பட்ட வட்டி சேமிப்பு, நிலக்கரி ஒதுக்கீடு, மத்திய அரசு திட்டங்கள், மத்திய அரசின் நிதி நிறுவனங்களில் இருந்து, குறைந்த வட்டியில் பெறப்பட்ட கடன் ஆகியவற்றால், ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டது.
இவற்றுக்கு பின்னும், மின் வாரியத்தில் இழப்பு ஏற்பட்டால், அதில் 50 சதவீதம் வரை, மாநில அரசு ஈடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே, இன்று மின் பகிர்மானக் கழகம் உயிர்ப்போடு செயல்படக் காரணம், உதய் திட்டம்தான்.
விவசாயம் மற்றும் குடிசை மின் நுகர்வோருக்கு மின் மீட்டர் பொருத்தப்படாது. வீட்டு மின் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். காலாண்டுக்கு ஒருமுறை மின் கட்டணம் உயர்த்தப்படாது. அதனால் ஏற்படும் நஷ்டத்தை மாநில அரசே ஈடு செய்யும் என, உதய் மின் திட்டத்தில் இருந்து நிறைய விஷயங்களுக்கு விலக்கு பெறப்பட்டது.
மின் கட்டண உயர்வை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் நடந்த, கண்டன ஆர்ப்பபாட்டங்களுக்கு, தமிழகம் முழுதும் வரவேற்பு கிடைத்தது. இதை பொறுத்துக் கொள்ள முடியாமல், அமைச்சர் தங்கம் தென்னரசு, மின் கட்டண உயர்வுக்கு, உதய் திட்டத்தில் நாங்கள் கையெழுத்திட்டதுதான் காரணம் எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிடும் நாளில், நேருக்கு நேர் விவாதிக்க நான் தயார்; அவர் தயாரா? மூன்றாண்டு ஆட்சிக்கு பின்பும், மூன்று முறை கடுமையான மின் கட்டணத்தை உயர்த்திய பின்பும், தங்கள் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, மின் வாரியத்தை லாபகரமாக இயக்க முடியவில்லை. இயலாமையை மறைக்கும் முயற்சியாக எங்கள் மீது பழிபோடுவதை விட்டுவிட்டு, இனியாவது மின் வாரியத்தை லாபகரமாக நடத்த முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***