ADDED : மே 25, 2024 08:49 PM

திருப்பூர்:வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் காரணமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 66 சதவீதம் அதிகரித்துள்ளது.
நம் நாட்டில் இருந்து, பல்வேறு உலக நாடுகளுடன் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. குறிப்பாக, வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளுடன், ஆயத்த ஆடை ஜவுளி வர்த்தகம் நடந்து வருகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், ஆண்டுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நடக்கிறது.
எட்டு நாடுகள்
ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்ப, 7,500 கோடி முதல், 12,250 கோடி ரூபாய் வரையில், மாதாந்திர ஏற்றுமதி நடக்கிறது. ஜவுளி வர்த்தக உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தியாவுடன், எட்டு நாடுகள் வரியில்லா வர்த்தகம் செய்துள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா, மொரீஷியஸ், சுவிட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக, நம் நாட்டுடன் நெருக்கமான வர்த்தக உறவை கொண்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனான, ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2023 அக்., மாதம், 663 கோடி ரூபாயாக இருந்தது; மார்ச் மாதம், 999 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, 66 சதவீதம் உயர்வாகும்.
உயர்வு
ஜப்பானுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2023 அக்., மாதம், 58.80 கோடி ரூபாயாக இருந்தது; டிச., மாதம், 131 கோடியாகவும், மார்ச் மாத நிலவரப்படி, 209 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள எட்டு நாடுகளுக்கு, கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், 15,166 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும், 1,529 கோடி ரூபாய் அளவுக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி நடந்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின், 'டாப் 10' ஆயத்த ஆடை ஏற்றுமதி நாடுகளில், ஐக்கிய அரபு எமிரேட்சும், ஆஸ்திரேலியாவும் இடம் பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.