ரியல் எஸ்டேட் நபர் கடத்தல் அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
ரியல் எஸ்டேட் நபர் கடத்தல் அ.தி.மு.க., நிர்வாகிக்கு வலை
ADDED : ஜூலை 16, 2024 02:12 AM
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் மண்மலையை சேர்ந்தவர் குணசீலன், 48; சென்னை பெரியமேடு பகுதியில் தங்கி, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.
இவரது நண்பர், திருவண்ணாமலை அடுத்த வேடியப்பனுாரை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன், 42. சில ஆண்டுகளுக்கு முன் குணசீலன், கோபாலகிருஷ்ணனிடம், 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றார்.
அதில், 50,000 ரூபாயை திரும்ப கொடுத்துள்ளார். பலமுறை கோபாலகிருஷ்ணன் கேட்டும், குணசீலன் பணத்தை கொடுக்கவில்லை. கோபாலகிருஷ்ணன், தன் நண்பரான, ஆடையூரை சேர்ந்த அ.தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலர் சரவணனிடம் கூறினார்.
இதையடுத்து, கோபாலகிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் கும்பல், 11ம் தேதி, சென்னையில் இருந்த குணசீலனை காரில் திருவண்ணாமலை கடத்தி வந்து, சரவணனுக்கு சொந்தமான செங்கல் சூளையில் வைத்து தாக்கினர்.
குணசீலனின் தங்கைக்கு தகவல் தெரிவித்தனர். அவர், 2.30 லட்சம் ரூபாயை ஆன்லைனில் அனுப்பினார். இதை பெற்ற அவர்கள், மேலும் வட்டி பணம் தரக்கேட்டு, அவரை அடைத்து வைத்து மிரட்டி உள்ளனர்.
குணசீலன், சென்னையில் உள்ள நண்பருக்கு, 'லொகேஷன் ஷேர்' செய்து, தான் கடத்தப்பட்ட தகவலை தெரிவித்தார்.
அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவல் படி, திருவண்ணாமலை தாலுகா போலீசார், குணசீலனை நேற்று முன்தினம் இரவு மீட்டனர். கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்த போலீசார் தப்பிய சரவணனை தேடி வருகின்றனர்.

