தாம்பரம் - ராமேஸ்வரம் உட்பட 10 புதிய ரயில்களுக்கு பரிந்துரை
தாம்பரம் - ராமேஸ்வரம் உட்பட 10 புதிய ரயில்களுக்கு பரிந்துரை
ADDED : ஏப் 09, 2024 04:58 AM

சென்னை : சென்னை தாம்பரம் - -ராமேஸ்வரம் உட்பட 10 புதிய ரயில்களை இயக்க, ரயில்வே வாரியத்திற்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்து உள்ளது.
தெற்கு ரயில்வேயில், பல ஆண்டுகளாக நடந்து வந்த இரட்டை ரயில் பாதை மற்றும் அகலப்பாதை திட்டங்கள் முடிந்துள்ளன. எனவே, பயணியரின் தேவை குறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் குழுவினர், பல மாதங்களாக ஆய்வு செய்து அறிக்கையை தயாரித்துள்ளனர்.
இதையடுத்து, தாம்பரம் - ராமேஸ்வரம், கோவை - தாம்பரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில், 10 புதிய ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திற்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.
அதன் விபரம்:
தாம்பரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக தினமும் ராமேஸ்வரத்திற்கு ரயில்
கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக தாம்பரத்திற்கு வாராந்திர ரயில்
தாம்பரம் -- பீஹார் மாநிலம் தனபூர் இடையே தினசரி விரைவு ரயில்
தாம்பரம் -- மேற்கு வங்க மாநிலம் சந்திரகாச்சி இடையே வாராந்திர விரைவு ரயில்
திருநெல்வேலி - ஜோத்பூர்; கொச்சுவேலி -- கவுஹாத்தி வாராந்திர விரைவு ரயில்
கொச்சுவேலி -- பெங்களூரு வாரம் மூன்று முறை ரயில் உட்பட 10 ரயில்களை இயக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் திட்டப் பணிகள் முடிந்துள்ள வழித்தடங்கள் மற்றும் பயணியர் தேவை உள்ள வழித்தடங்களில் ஆய்வு செய்து, கூடுதல் ரயில்கள் இயக்க பரிந்துரைப்பது வழக்கமானது தான்.
இந்த அறிக்கையை ரயில்வே வாரியம் ஆய்வு செய்த பின், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். பரிந்துரை என்பது ரயில்கள் இயக்குவது குறித்து ஆரம்ப கட்ட பணி தான்; இறுதி முடிவை ரயில்வே அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

