ADDED : ஜூலை 25, 2024 12:41 AM
சென்னை:தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான மின் தொடரமைப்பு கழகம், அதிக திறன் உடைய துணை மின் நிலையங்களையும், மின் வழித்தடங்களையும் நிர்வகிக்கிறது.
அதன் சாதனங்களை இடமாற்றம் செய்ய கோரும் நுகர்வோர், அதற்கு ஏற்படும் நிர்வாகம் மற்றும் மதிப்பீட்டு செலவை, கட்டணமாக செலுத்த வேண்டும்.
அதன்படி, இடமாற்றம் செய்யக் கோரி விண்ணப்பிக்கும்போது, மதிப்பீட்டுத் தொகையில், 22 சதவீதம் நிர்வாகம் மற்றும் மேற்பார்வை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை இம்மாதம், 8ம் தேதி முதல், 5  சதவீதமாக குறைத்து, மின் தொடரமைப்பு கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
அரசு துறைகள், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் பள்ளம் தோண்டும்போது, மின் கேபிளை பழுதாக்கி விடுகின்றன. அதை சரிசெய்வதற்கான தொகை, அந்நிறுவனங்களிடம் வசூலிக்கப்படுகிறது. இதனுடன், மின் சாதனங்களை இடமாற்றம் செய்வதற்கான மதிப்பீட்டுத் தொகையில், தற்போது மேற்பார்வை கட்டணம், 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

