பத்திரங்கள் மீதான தணிக்கையில் வரம்பு மீறும் மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கைக்கு தயாராகுது பதிவுத்துறை
பத்திரங்கள் மீதான தணிக்கையில் வரம்பு மீறும் மாவட்ட பதிவாளர்கள் நடவடிக்கைக்கு தயாராகுது பதிவுத்துறை
ADDED : மார் 08, 2025 12:27 AM
சென்னை:பத்திரங்களில் வருவாய் இழப்பை பார்ப்பதற்கு பதிலாக, வரம்பு மீறி செயல்படும் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் மீது புகார்கள் குவியும் நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை தயாராகி வருகிறது.
பத்திரங்களை பதிவு செய்யும் போது, வழிகாட்டி மதிப்பு சரியாக உள்ளதா என்பதை, சார் - பதிவாளர்கள் கவனிக்க வேண்டும்.
அவர்களின் அலட்சியம் காரணமாக, பத்திரங்களில் வகைப்பாடு, வழிகாட்டி மதிப்பு தொடர்பான குறைபாடுகள் இருந்தால், வருவாய் இழப்பு ஏற்படும்.
எனவே, இதுபோன்ற குறைபாடுகளை கண்டுபிடிக்க, அனைத்து பத்திரங்களும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். பதிவு மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் தணிக்கை பணிக்கு என, மாவட்ட பதிவாளர்கள் உள்ளனர்.
இவர்கள் தங்கள் எல்லைக்குள் வரும் சார் - பதிவாளர் அலுவலகங்களில் பதிவாகும் பத்திரங்களை, ஆய்வு செய்ய வேண்டும்.
இவர்கள் எழுதும் குறிப்பு அடிப்படையில், வருவாய் இழப்பு ஏற்படுத்திய சார் - பதிவாளர்கள் மீது, பதிவுத்துறை நடவடிக்கை எடுக்கும். மேலும், சம்பந்தப்பட்ட சொத்து வாங்கியவரிடம் இருந்து உரிய தொகையை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், சமீப காலமாக சில தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் வரம்பு மீறி செயல்படுவதாக, சார் - பதிவாளர்களும், பொதுமக்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது:
பொதுவாக, பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணதாரருக்கு, மாவட்ட பதிவாளருடன் தொடர்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
ஆனால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பதிவு மாவட்டங்களில், உயர் மதிப்பு சொத்துக்கள் பதிவுக்கு வந்தால், அங்குள்ள தணிக்கை மாவட்ட பதிவாளரை சந்தித்து வருமாறு, சில சார் - பதிவாளர்களே பரிந்துரைக்கின்றனர்.
குறிப்பாக, சில இடங்களில் பிரதான சாலையை ஒட்டிய மனையை பதிவு செய்தால், அந்த மனைக்கான மதிப்பு அல்லது பிரதான சாலைக்கான மதிப்பு அடிப்படையில் பத்திரப்பதிவு இருக்க வேண்டும்.
ஆனால், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள், இந்த இரண்டுக்கும் தொடர்பில்லாத ஒரு மதிப்பை குறிப்பிட்டு, இழப்பு ஏற்படுத்தியதாக குறிப்பு எழுதுகின்றனர்.
ஒரு மனை வணிக மனையா அல்லது குடியிருப்பு மனையா என்பதை தெளிவாக பார்க்காமல், பத்திரத்தில் இணைப்பாக இருக்க வேண்டிய சான்றுகள் தொடர்பான விஷயங்களில், தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் குறிப்பு எழுதி வரம்பு மீறுகின்றனர்.
இது தொடர்பாக, பல்வேறு பதிவு மாவட்டங்களில் இருந்து பொது மக்களும், சார் - பதிவாளர்களும் துறை மேலதிகாரிகளுக்கு புகார் அனுப்பி வருகின்றனர். இதன் அடிப்படையில், வரம்பு மீறும் தணிக்கை மாவட்ட பதிவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பதிவுத்துறை தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.