ADDED : மே 20, 2024 12:07 AM

சென்னை: 'கிர்கிஸ்தானில், மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்' என, டி.ஜி.பி., அலுவலகத்தை தொடர்பு கொண்டு, பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.
மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான கிர்கிஸ்தானின் தலைநகர் பிஸ்ஹேக்கில் உள்ள மருத்துவ பல்கலையில், எகிப்து மற்றும் கிர்கிஸ்தான் மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்து, விடுதிகள் மற்றும் வீடுகளில் தங்கியுள்ள பாக்., மற்றும் நம் நாட்டு மாணவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
இதனால், நம் நாட்டு மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, இந்திய துாதரகம் அறிவித்துள்ளது. தமிழக மாணவர்கள், வீடுகளில் விளக்கை அணைத்து விட்டு, அடைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
டி.ஜி.பி., அலுவலக போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கிர்கிஸ்தானில் உள்ள தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், எங்களை பெற்றோர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தொடர்பு கொண்டு பேசிய வண்ணம் உள்ளனர்.
தமிழக காவல் துறையில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பிரச்னைகளை தீர்க்க தனிப்பிரிவு உள்ளது. இப்பிரிவு வாயிலாக, கிரிகிஸ்தானில் உள்ள தமிழக மாணவர்களின் நலன் குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

