ADDED : மே 25, 2024 08:39 PM
சென்னை:வீடு உள்ளிட்ட கட்டடங்களில், 10 கிலோ வாட் வரை அமைக்கப்படும் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையத்திற்கு, தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் வீடு, கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில், 1 கிலோ வாட், 5, 10, 15 கி.வா., என, பல்வேறு திறன்களில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த மின்சாரத்தை உரிமையாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.
எனவே, மின் நிலையம் அமைக்கும்போது, மின் வாரிய பிரிவு அலுவலகங்களில், சாத்தியக்கூறு ஒப்புதல் பெறப்பட வேண்டும். இதற்கு விண்ணப்பிக்கும்போது, டிரான்ஸ்பார்மரின் திறன் போன்ற தொழில்நுட்ப விபரங்களை பார்த்து, பிரிவு அலுவலகங்களில் ஒப்புதல் அளிக்கப்படும். இதற்கு காலதாமதம் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
எனவே, 3 கிலோ வாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு ஒப்புதல் பெற தேவையில்லை என, மின் வாரியம், இந்தாண்டு ஜனவரியில் அறிவித்தது.
நாடு முழுதும், 1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மத்திய அரசு அதிக மானியம் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில், 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பலரும் அந்த மின் நிலையம் அமைக்க விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், 10 கிலோ வாட் வரை மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாத்தியக்கூறு ஒப்புதல் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு, மின் வாரியத்திற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.