ADDED : ஜூன் 14, 2024 02:17 AM
சென்னை:தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சீசனில், 2.15 லட்சம் கடல் ஆமை குஞ்சுகள் பாதுகாக்கப்பட்டு, கடலில் விடுவிக்கப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும், ஜன., முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் கடலாமைகள் கரையில் வந்து முட்டையிடுவது வழக்கம். கடலோரப் பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், இந்த முட்டைகள் சிதைந்துவிட வாய்ப்புள்ளது. அதனால், கடலாமை இனமே மெல்ல அழியும் நிலை ஏற்பட்டது.
இதைக் கருத்தில் வைத்து, கடலாமை முட்டைகளை சேகரித்து, அதை முறையாக பாதுகாக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. வனத்துறையினர் மட்டுமல்லாது, தன்னார்வலர்களும் பெருமளவில் இதில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், நடப்பு ஆண்டு சீசனில் சேகரித்து பாதுகாக்கப்பட்ட முட்டைகளில் இருந்து வெளிவந்த குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன.
இதுகுறித்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹூ வெளியிட்ட அறிவிப்பு:
நடப்பு ஆண்டில், சென்னை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், 53 இடங்களில் கடலாமை முட்டைகள் சேகரித்து பாதுகாக்கப்பட்டன. இந்த வகையில், 2.58 லட்சம் முட்டைகள் சேகரிக்கப்பட்டன. இதிலிருந்து, 2.15 லட்சம் கடலாமை குஞ்சுகள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டன. கடந்த ஆண்டு, இதே காலத்தில், 1.82 லட்சம் கடலாமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

