கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் ஒரே மாதிரி விதிமுறை வெளியீடு
கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் ஒரே மாதிரி விதிமுறை வெளியீடு
ADDED : ஏப் 17, 2024 09:55 PM
சென்னை:அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் பயிர் கடன் வழங்க ஒரே மாதிரியான விதிமுறைகளை கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.
கூட்டுறவு துறையின் கீழ் பல்வேறு கூட்டுறவு வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் செயல்படுகின்றன. அவை, விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் பயிர் கடன் வழங்குகின்றன.
குறிப்பிட்ட காலத்தில் கடனை செலுத்தி விட்டால் வட்டி முழுதும் தள்ளுபடி கிடைக்கும். சில சங்கங்களில் கடன் வழங்கும் விதிமுறைகள் வெவ்வேறாக உள்ளன.
தற்போது, பயிர் கடன் வழங்குவதில் ஒருங்கிணைந்த மாதிரி ஒழுங்குமுறை விதிகளை, கூட்டுறவு துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
தனிநபர் பிணையம் / தங்க நகை அடமானம் பேரில் அதிகபட்சம் 1.60 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீத வட்டியில் கடன் வழங்கலாம். அபராத வட்டி, 1 சதவீதம்.
தங்க நகை அடமானம் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை, 7 சதவீத வட்டியில் வழங்கலாம்.
சாகுபடி நில அடமானம் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை வழங்கலாம்.
குத்தகை சாகுபடிக்கு தனிநபர் பிணையத்தின் வாயிலாக, 1.60 லட்சம் ரூபாய் வரையும், அடமானத்தின் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரையும் கடன் வழங்கலாம்.
சர்க்கரை ஆலையில் இருந்து பெறப்படும் ஒப்பந்த சாகுபடிக்கு வழங்கப்படும் கடன்களில், 10 ஏக்கர் வரை கரும்பு சாகுபடிக்கு தனிநபர் பிணையத்தின் வாயிலாக, 3 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
கால்நடை பராமரிப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களுக்கு நடைமுறை மூலதன கடன், தனிநபர் பிணையத்தில், 1.60 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். அதில், பயிர் கடனும் சேரும்.
பயிர் கடன் பெறாமல், கால்நடை பராமரிப்புக்கு மட்டும் கடன் பெற்றால், அடமானத்தின் வாயிலாக, 2 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
கடன் பெறும் உறுப்பினர் மற்றும் பிணையதாரர், சங்கத்தில் வேறு எந்த கடனும் பெற்று, தவணை தவறாதவராக இருக்க வேண்டும். விவசாய நகை கடனுக்கு ஈடாக வைக்கப்பட்ட நகைகளின் எடை, உண்மை தன்மை, தரம் சரியாக இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
அடங்கல் சான்று இல்லாமல் பயிர் கடன் வழங்கக்கூடாது என, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண் இயக்குனர்கள் மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டு உள்ளது.

