பிரசாரத்திற்கு மின் திருட்டு நடவடிக்கை எடுக்க தயக்கம்
பிரசாரத்திற்கு மின் திருட்டு நடவடிக்கை எடுக்க தயக்கம்
ADDED : ஏப் 06, 2024 09:21 PM
சென்னை:தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும், 19ல் நடக்கிறது. இதனால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்சியினர் தங்கள் பகுதிகளில், பிரசாரம் செய்ய வரும் தலைவர்களை வரவேற்று, அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கின்றனர். இதற்கு பல இடங்களில், முறைகேடாக மின்சாரம் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், குன்றத்துாரில் சில தினங்களுக்கு முன் பிரசாரம் செய்தார். இதற்கு, மின்கம்பியில் இருந்து மின்சாரம் திருடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதேபோல, பல இடங்களில் கட்சியினர் பிரசாரத்திற்கு மின்சாரம் திருடுகின்றனர். இருப்பினும், மின் வாரிய பொறியாளர்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, மின் ஊழியர்கள் கூறியதாவது:
தற்போது, வெயிலால் மின் தேவை அதிகரித்து வருகிறது. அதை பூர்த்தி செய்ய மின் கொள்முதலுக்கு அதிகம் செலவிடப்படுகிறது. இந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு மின்சாரம் திருடினால், வாரியத்திற்கு வருவாய் இழப்புஏற்படுவதுடன், மின் விபத்தால் உயிரிழப்புஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே, பிரசாரத்திற்கு முறைப்படி தற்காலிக மின் இணைப்பு பிரிவில் விண்ணப்பித்து, கட்சியினர் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

