புதுப்பிக்கத்தக்க மின் நிறுவுதிறன் 22,000 மெகாவாட்டை தாண்டியது
புதுப்பிக்கத்தக்க மின் நிறுவுதிறன் 22,000 மெகாவாட்டை தாண்டியது
ADDED : ஏப் 14, 2024 06:32 AM
சென்னை: தமிழகத்தில் மார்ச் மாத நிலவரப்படி, காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் நிறுவுதிறன், 22,161 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதைத் தடுக்க, காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துமாறு, அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.
தமிழகத்தில், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க சாதகமான சூழல் உள்ளது. இதனால், பலரும் அந்த மின் நிலையங்கள் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மத்திய புதுப்பிக்கத்தக்க மின்துறை, கடந்த மார்ச் நிலவரப்படி, நாட்டில் மாநில வாரியாக சூரியசக்தி, காற்றாலை, நீர்மின் நிலையங்களின் மின் நிறுவுதிறனை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 10,603 மெகாவாட் திறனில் காற்றாலை மின் நிலையங்கள் அமைத்துள்ளன.
மேலும், 7,546 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்களும்; 599 மெகா வாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களும்; 66 மெகாவாட் திறனில் விவசாய நிலங்களில் சூரியசக்தி மின் நிலையங்களும் உள்ளன. எனவே, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவுதிறன், 8,211 மெகாவாட்டாக உள்ளது.
தமிழகத்தில், 2,301 மெகாவாட் திறனில் நீர்மின் நிலையங்கள் உள்ளன. அதில், 25 மெகாவாட்டிற்கு குறைவான சிறிய நீர்மின் நிலையங்களின் பங்கு, 123 மெகாவாட். சர்க்கரை ஆலையை உள்ளடக்கிய இணை மின் நிறுவுதிறன், 1,045 மெகாவாட்டாக உள்ளது.
எனவே, மேற்கண்ட மின்சாரத்தை உள்ளடக்கிய ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவுதிறன், 22,161 மெகாவாட் உடன், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நாட்டில், குஜராத் மாநிலம், 27,462 மெகாவாட்டுடன் புதுப்பிக்கத்தக்க மின் நிறுவுதிறனில் முதலிடத்திலும்; ராஜஸ்தான், 27,103 மெகாவாட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
கடந்த மார்ச் நிலவரப்படி, நாடு முழுதும் காற்றாலை நிறுவுதிறன், 45,886 மெகாவாட்; சூரியசக்தி, 81,813 மெகாவாட்; நீர், 51,931 மெகாவாட்; சர்க்கரை ஆலை, 10,941 மெகாவாட் என, ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க மின் நிறுவுதிறன், 1.90 லட்சம் மெகாவாட்டாக உள்ளது.

