நடப்பாண்டு 407 கோவில்களில் ரூ.150 கோடி செலவில் திருப்பணி
நடப்பாண்டு 407 கோவில்களில் ரூ.150 கோடி செலவில் திருப்பணி
ADDED : ஜூன் 27, 2024 01:08 AM

சென்னை: ''நடப்பாண்டு 407 கோவில்களில், 150 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என, அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
l ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெறும், 17,000 கோவில்களின் வைப்புத் தொகை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 2.50 லட்சம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். இந்தாண்டு 1,000 நிதி வசதியற்ற கோவில்களுக்கு, இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்
l ஒருகால பூஜை திட்ட கோவில் அர்ச்சகர்களின் குழந்தைகள் நலன் கருதி, இந்தாண்டு 500 மாணவர்களுக்கு, மேல் படிப்பிற்காக தலா 10,000 ரூபாய், கல்வி உதவித்தொகை வழங்கப்படும்
l கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மசுவாமி கோவிலில், 6.50 கோடி ரூபாயில்; தென்காசி மாவட்டம், இலஞ்சி குமாரர் கோவிலில், 2.50 கோடி ரூபாயில், புதிய தங்கத்தேர் செய்யப்படும்
l சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், யானை வாகனத்திற்கு, 1.50 கோடி ரூபாயில் வெள்ளித்தகடு; புலியூர் பரத்வாஜேசுவரர் கோவிலுக்கு, 80 லட்சம் ரூபாய் மதிப்பில் வெள்ளித்தகடு போர்த்திய, புதிய அதிகார நந்தி வாகனம் உருவாக்கப்படும்
l சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலில், மூலவர் சன்னிதி மரக்கதவில், வெள்ளித்தகடு பொருத்தும் திருப்பணி 20 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்
l கன்னியாகுமரி மாவட்டத்தில், இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத, 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினத்திற்கான மானியத் தொகை, 8 கோடி ரூபாயில் இருந்து, 13 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
அன்னதானம்
l பக்தர்களுக்கு நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம், மதுரை கள்ளழகர் கோவில், கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகியவற்றில் விரிவுபடுத்தப்படும். ஒரு வேளை அன்னதானம் திட்டம், இந்தாண்டு மேலும் ஆறு கோவில்களில் விரிவுபடுத்தப்படும்
l பழனி பழனியாண்டவர் கோவில் சார்பில் நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், ஏற்கனவே காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்தாண்டு மதிய உணவும் வழங்கப்படும்
l நாள் முழுதும் பிரசாதம் வழங்கும் திட்டம், மேலும் ஐந்து கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும்
ஆன்மிகப் பயணம்
l ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து, காசி விசுவநாத சுவாமி கோவிலுக்கு, இந்தாண்டு 420 பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். அறுபடை வீடுகளுக்கு, 1,000 பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படுவர்
l இந்தாண்டு 700 ஜோடிகளுக்கு, கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்படும்.
ஊதிய உயர்வு
l நிதி வசதியற்ற கோவில்களில் மிகக்குறைந்த ஊதியம் பெற்று வரும் இசைக்கலைஞர்களுக்கு, 10,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும். 50 கோவில்களில் 100 இசைக்கலைஞர்கள், 1,000 ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்படுவர்
l பழனி கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பாக, ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள் புதிதாக துவக்கப்படும்.
கோவில் திருப்பணி
l நடப்பாண்டு 407 கோவில்களில், 150 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மற்றும் புறநகரில் அமைந் துள்ள, 115 கோவில்களில் 50 கோடி ரூபாயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
மேலும் 19 கோவில்களில் புதிய ராஜகோபுரங்கள் 32 கோடி ரூபாயில் கட்டப்படும். 23 கோவில்களில் 15.60 கோடி ரூபாயில் புதிய திருத்தேர் உருவாக்கப்படும்
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.