'கேங்மேன்' பணியில் 5,000 பேரை நியமிக்க அரசிடம் அனுமதி கேட்பு
'கேங்மேன்' பணியில் 5,000 பேரை நியமிக்க அரசிடம் அனுமதி கேட்பு
ADDED : பிப் 25, 2025 02:26 AM
சென்னை : 'கேங்மேன்' பணியில், 5,000 பேரை நியமிக்க, தமிழக அரசிடம் மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில், களப்பணிகளை மேற்கொள்ள, முதல் முறையாக, 'கேங்மேன்' என்ற பதவியில், 5,000 ஊழியர்களை நியமிக்க, 2019ல் அறிவிப்பு வெளியானது. இதற்கு உடல் தகுதி, எழுத்துத் தேர்வு நடத்தி அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம், 85,000 பேர் விண்ணப்பித்ததில், உடல் தகுதித் தேர்வில், 15,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் எழுத்துத் தேர்வு எழுதினர். திடீரென, 5,000 பேருக்கு பதில், 10,000 பேர் தேர்வு செய்யப்படுவதாக, 2020ல் அறிவிக்கப்பட்டது.
வேலைக்கு தேர்வான, 9,600 பேரின் பட்டியல், 2021 பிப்ரவரியில் வெளியானது. அதன் அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.
ஆனால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு வேலை தராமல், ஒற்றை இலக்கில் மதிப்பெண் எடுத்த பலருக்கு, வேலை வழங்கப்பட்டது என்ற புகார் எழுப்பி, வேலை கிடைக்காதவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், எழுத்துத் தேர்வில் பங்கேற்றவர்கள், அனைவருக்கும் வேலை வழங்கக்கோரி, போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆராய, மின்வாரியம் குழு அமைத்தது. குழுவின் முடிவு விபரங்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. தற்போது, களப்பிரிவில் மட்டும், 30,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் இருப்பதால், ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துஉள்ளது.
எனவே, கேங்மேன் பதவியில், 5,000 பேரை நியமனம் செய்ய, அரசிடம் மின்வாரியம் அனுமதி கேட்டுள்ளது. முறைப்படி அரசுக்கு கடிதம் எழுதி, அதற்கான பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

