கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி நிறுத்துவதை தள்ளிவைக்க கோரிக்கை
கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி நிறுத்துவதை தள்ளிவைக்க கோரிக்கை
UPDATED : மார் 22, 2024 12:54 PM
ADDED : மார் 22, 2024 12:54 AM
சென்னை:கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்கு, வரும் மே மாதத்திற்கு பதில், ஜூனில் இருந்து மின் உற்பத்தியை நிறுத்த அறிவுறுத்துமாறு, மத்திய மின் துறைக்கு, தமிழக மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், மத்திய அரசின் இந்திய அணு மின் கழகத்தின் அணு மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 1,000 மெகா வாட் திறனில் இரு அணு உலைகள் உள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இருந்து தமிழகத்திற்கு தினமும், 1,152 மெகா வாட்டும்; மீதி மின்சாரம், பிற மாநிலங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக, இந்தாண்டு ஜன., 29 முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதி, மீண்டும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
-தமிழகத்தில் இம்மாதம் முதல் கோடைக்காலம் துவங்கியதால், தினசரி மின் தேவை, 18,000 மெகா வாட்டை தாண்டியுள்ளது. கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக, மே 5 முதல் ஜூலை 8 வரை, 65 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது.
இதனால், மின் தேவையை பூர்த்தி செய்ய சிரமம் ஏற்படும் என்பதால், மே மாதத்திற்கு பதில், ஜூனில் இருந்து கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தியை நிறுத்துமாறு, இந்திய அணுமின் கழகத்திற்கு, மின் வாரியம் கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.
எனவே, கூடங்குளம் இரண்டாவது அணு உலையில், மே மாதத்திற்கு பதில், ஜூன் முதல் வாரத்தில் இருந்து மின் உற்பத்தியை நிறுத்த, அணு மின் கழகத்தை அறிவுறுத்துமாறு, மத்திய மின் துறைக்கு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

