ADDED : பிப் 22, 2025 09:39 PM
நாமக்கல்:நாமக்கல் தாலுகா டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று முன்தினம் நடந்தது. சங்கத்தின் தலைவர் வரதராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், சீனா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட, தரமற்ற, விலை குறைந்த டயர்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கு, மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
அவற்றை அனுமதிக்கும் போது, உள்நாட்டில் தயாரிக்கப்படும் தரமான டயர்களின் விற்பனை பாதிப்பதுடன், டயர் ரீட்ரெட்டிங் தொழில் கடுமையான இழப்பை சந்திக்கும் நிலை ஏற்படும். மேலும், அரசுக்கு வருவாய் இழப்பும், உள்ளூர் வர்த்தகமும் பாதிக்கும்.
விரைவில் நிறைவேற்றப்படும் தமிழக பட்ஜெட்டில், டயர் ரீட்ரெட்டிங் உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, மின் கட்டண சலுகை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.