வணிகர் பிரச்னையை காது கொடுத்து கேட்க தனி அதிகாரிகள் நியமிக்க அரசுக்கு கோரிக்கை
வணிகர் பிரச்னையை காது கொடுத்து கேட்க தனி அதிகாரிகள் நியமிக்க அரசுக்கு கோரிக்கை
ADDED : மார் 05, 2025 04:56 AM
சென்னை ; வணிகர் பிரச்னைகளைக் கேட்டறிந்து, தீர்வு தரும் வகையில், வணிகர் நல வாரியத்தில், புதிய உறுப்பினர்களை சேர்க்க, அதிகாரிகள் ஆர்வம் காட்டாமல் இருப்பது, வணிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், 40 லட்சம் வணிகர்கள் உள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கவும், அரசுக்கு வரி வருவாய் கிடைக்கவும் வணிகர்கள் உதவுகின்றனர். எனவே, அவர்களின் பிரச்னைகளை கேட்டறிந்து தீர்வு காண, வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், மருத்துவ நிதியுதவி, குடும்ப நல நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வணிகர் நல வாரிய தலைவராக முதல்வரும், துணை தலைவராக வணிக வரித்துறை அமைச்சரும் உள்ளனர். அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக ஐந்து அதிகாரிகளும், அலுவல் சாரா உறுப்பினர்களாக, வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், 30 பேரும் உள்ளனர்.
இதுகுறித்து, வணிகர்கள் கூறியதாவது:
கருணாநிதி முதல்வராக இருந்தபோது, வணிகர் நல வாரிய கூட்டங்களை அடிக்கடி நடத்தி, வணிகர்கள் வாயிலாக, மக்களின் மனநிலையை தெரிந்து கொள்வார். அதற்கேற்ப, அரசு திட்டங்கள், கொள்கைகள் வெளியாகும். வணிகர்களின் பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது.
தற்போது, வணிகர் நல வாரியம் பெயரளவுக்கு தான் செயல்படுகிறது. இதன் அலுவலகம் எங்கிருக்கிறது, அதில் எப்படி உறுப்பினராக சேருவது என, பலருக்கு தெரிவதில்லை.
எனவே, வணிகர்களை சந்தித்து, வாரியத்தில் புதிய உறுப்பினர்களை அதிகம் சேர்க்குமாறு, அரசு அறிவுறுத்துகிறது. ஆனால், அதிகாரிகள் அந்த பணிகளில் கவனம் செலுத்துவதில்லை. மொத்த வணிகர்களில், 20 சதவீதம் பேர் கூட வாரியத்தில் உறுப்பினராகவில்லை.
எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும், வணிகர் நலன் தொடர்பான பணிகளுக்கு, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்கள் வாயிலாக, மாதந்தோறும் கூட்டம் நடத்தி, புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
பாதிக்கப்படும் வணிகர்களின் குடும்பத்திற்கு, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.