4வது மாடியிலிருந்து தவறி விழுந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்பு
4வது மாடியிலிருந்து தவறி விழுந்து அந்தரத்தில் தொங்கிய குழந்தை மீட்பு
ADDED : ஏப் 29, 2024 06:16 AM

சென்னை : சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில், பூம்பொழில்நகரிலுள்ள தனியார் குடியிருப்பு நான்காவது தளத்தில் வசிப்பவர் வெங்கடேசன், 34. இவரது மனைவி ரம்யா, 29.
இருவரும் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். தம்பதிக்கு, நான்கரை வயதில் ஆண் குழந்தை மற்றும் ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. நேற்று காலை 10:30 மணியளவில், ரம்யா வீட்டின் பால்கனியில் நின்று, தன் ஆறு மாத பெண் குழந்தை ஹிரன்மயியை இடது கையில் வைத்தபடி சாப்பாடு ஊட்டியுள்ளார்.
அப்போது, கையில் இருந்த குழந்தை திமிறி, ரம்யாவின் கையிலிருந்து, 15 அடி கீழே முதல் மாடியில் உள்ள, 'சன் ஷேடு' கூரையில் பலத்த சத்தத்துடன் விழுந்துள்ளது.
குழந்தை அழும் சத்தம் கேட்டு ஒன்று கூடிய அக்கம் பக்கத்தினர், குழந்தை அந்தரத்தில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே போர்வை ஒன்றை விரித்து, குழந்தை தரையில் விழாமல் இருக்க பிடித்தபடி நின்றனர்.
இதற்கிடையில், அதே குடியிருப்பை சேர்ந்த ஹரி என்ற வாலிபர், முதல் தளத்திலுள்ள பால்கனி, கண்ணாடி கைப்பிடி சுவர் மீது ஏறி, குழந்தையை பத்திரமாக மீட்டார்.
அதிர்ஷ்டவசமாக லேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின், ஆவடி தனியார் மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
அங்கு முழு உடல் பரிசோதனைக்கு பின், குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லையென தெரிய வந்ததால், மாலை 4:45 மணியளவில் குழந்தையை வீட்டிற்கு கொண்டு வந்தனர்.
குழந்தை மாடியில் இருந்து தவறி விழுந்த இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. சம்பவம் நடந்த 10 நிமிடங்களில் குழந்தையை மீட்ட வாலிபர் ஹரிக்கு, பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, தாயின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
குழந்தையை மீட்ட ஹரி கூறியதாவது: பலத்த சத்தம் கேட்டதால், கீழே ஓடி வந்து பார்த்தேன். குழந்தை அந்தரத்தில் தவழ்வதை பார்த்து, உடனே மூன்றாவது மாடிக்கு சென்ற போது, பால்கனி பூட்டப்பட்டு இருந்தது. பின், முதல் மாடிக்கு சென்று, உறவினர் என்னை பிடித்து கொண்ட நிலையில், பால்கனி சுவர் மீது ஏறி குழந்தையை பத்திரமாக மீட்டேன்.
குழந்தையை காப்பாற்றிய நிமிடங்கள் மிகவும் பதற்றமாக இருந்தது. குழந்தையை காப்பாற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

