ஆசை காட்டி மோசம் செய்யும் நெல் கொள்முதல் நிலையங்கள்
ஆசை காட்டி மோசம் செய்யும் நெல் கொள்முதல் நிலையங்கள்
ADDED : மார் 06, 2025 11:54 PM
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்கப்படும் நெல் மூட்டைகளுக்குரிய பணம், 20 நாட்களாகியும் வரவாகாததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், 3.16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது; தற்போது அறுவடை பணிகள் நடக்கின்றன. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், 41 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் நெல் கொண்டு வருவது அதிகரித்துள்ள நிலையில், அதற்குரிய பணத்தை வங்கி கணக்கில் வரவு வைப்பது தாமதமாகிறது.
மங்களக்குடி குரூப் விவசாயி எம்.முருகானந்தம் கூறுகையில், ''சிறுமலை கோட்டையில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 415 நெல் மூட்டைகளை பிப்., 13ல் விற்றேன். 4 லட்சத்து 6,000 ரூபாய் தர வேண்டும். இதுவரை என் வங்கி கணக்கில் வரவு வைக்கவில்லை; இன்று, நாளை என இழுத்தடிக்கின்றனர்,'' என்றார்.
திருவாடானை விவசாயிகள் குழு ஒருங்கிணைப்பாளர் கவாஸ்கர் கூறுகையில், ''பணம் வந்தால் தான் அறுவடை கூலி, கடனை செலுத்த முடியும். கலெக்டர் வரை புகார் தெரிவித்துள்ளோம். விரைவில் பணத்தை வரவு வைக்க வேண்டும்,'' என்றார்.
நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறுகையில், 'இதுவரை, 2 கோடி ரூபாய் வரை விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நிதி வர தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
நெல் கொள்முதல் செய்த உடன் பணம் கிடைக்கும் எனக்கூறி, விவசாயிகளிடம் கொள்முதல் செய்பவர்கள், விவசாயிகளை ஏமாற்றும் வகையில் செயல்படுவதாக பாதிக்கப்பட்டோர் கூறினர்.
- நமது நிருபர் -