கரும்பு உற்பத்தி குறைவால் சர்க்கரை ஆலைகள் மூடப்படும் அபாயம்
கரும்பு உற்பத்தி குறைவால் சர்க்கரை ஆலைகள் மூடப்படும் அபாயம்
ADDED : ஜூலை 23, 2024 06:46 AM
சென்னை: கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் அரவைக்கு போதிய கரும்பு கிடைக்காததால், அவற்றை மூடும் அபாயம் உருவாகி வருகிறது.
தமிழகத்தில், 2018க்கு முன் வரை, 6 லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது சாகுபடி பரப்பு, 3.92 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. கரும்பு விவசாயிகளை நம்பி, 40க்கும் மேற்பட்ட சர்க்கரை ஆலைகள் உள்ளன. கொள்முதல் செய்த கரும்புக்கு உரிய விலையை ஆலைகள் வழங்காததால், சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்தது.
இதனால், பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்ட மாற்று பயிர்களை, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க, ஏக்கருக்கு, 210 ரூபாய் ஊக்கத்தொகையை வேளாண் துறை வழங்கி வருகிறது.
அதன்பிறகும், சாகுபடி பரப்பு அதிகரிக்கவில்லை. மழை குறைவு, பூச்சி தாக்குதல், தொழிலாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்னைகளும் இதற்கு காரணம். கடந்த 2022 - 23ம் ஆண்டு அரவை பருவத்தில், கூட்டுறவு ஆலைகளுக்கான கரும்பு சாகுபடி பதிவு, 1.35 லட்சம் ஏக்கரில் இருந்து, 1.23 லட்சமாக குறைந்தது. இது, 2023 - 24ம் ஆண்டு, மேலும் 20,000 ஏக்கர் வரை குறைந்து உள்ளது.
இதனால், அரவைக்கு கரும்பு கிடைக்காமல் காற்றாடும் நிலைக்கு, கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் தள்ளப்பட்டு உள்ளன. இதேநிலை தொடர்ந்தால், பல கூட்டுறவு ஆலைகளை மூட வேண்டிய நிலை ஏற்படும். இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு பாதிக்கும்.
எனவே, நடப்பு பருவத்தில் கரும்பு சாகுபடியை அதிகரிக்க தேவையான முயற்சிகளை, வேளாண் துறையினர் மேற்கொள்ள வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

