23,000 வீடுகளில் 'ரூப் டாப்' சூரியசக்தி மின் நிலையங்கள்
23,000 வீடுகளில் 'ரூப் டாப்' சூரியசக்தி மின் நிலையங்கள்
ADDED : மார் 12, 2025 11:51 PM
சென்னை:மத்திய அரசு திட்டத்தின் கீழ், தமிழகத்தில், 23,000 வீடுகளில், 120 மெகா வாட் திறனுக்கு, மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, மத்திய அரசு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கியது. இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் மின் கட்டண செலவை குறைக்க, நாடு முழுதும், ஒரு கோடி வீடுகளில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, 1 கிலோ வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க 30,000 ரூபாய்; 2 கி.வாட்டிற்கு, 60,000 ரூபாய்; அதற்கு மேல் அமைத்தால், 78,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானிய தொகை, பயனாளியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
இத்திட்டத்திற்கு, மத்திய மின் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மத்திய அரசு திட்டத்தில் மின் நிலையம் அமைக்க, தமிழகத்தில் இருந்து, 30,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
இதுவரை, 23,000 வீடுகளில், 1 கிலோ வாட், 2 கி.வாட் என, பல்வேறு திறன்களில் ஒட்டுமொத்தமாக, 120 மெகா வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.