டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி மோசடி: அமலாக்கத்துறை அறிவிப்பு
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி மோசடி: அமலாக்கத்துறை அறிவிப்பு
UPDATED : மார் 14, 2025 12:43 AM
ADDED : மார் 14, 2025 12:17 AM

சென்னை:'டாஸ்மாக்' கடை களுக்கு மதுபானம் கொள்முதல் செய்ததில், அதிகாரிகள், ஆலை அதிபர்கள் கூட்டு சேர்ந்து, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு உள்ளதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையின் கீழ் செயல்படும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கட்டுப்பாட்டில் 'டாஸ்மாக்' நிறுவனம் செயல்படுகிறது.
இதற்கு மாநிலம் முழுதும், 4,830 சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கும் மேலாக மதுபானங்கள் விற்பனையாகின்றன.
இதற்காக, டாஸ்மாக் நிறுவனம் சார்பில், ஏழு ஆலைகளில் இருந்து பீர், 11 ஆலைகளில் இருந்து மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. மதுபான ஆலைகளில் பெரும்பாலானவற்றை, தி.மு.க., முக்கிய புள்ளிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகளே நடத்தி வருகின்றனர்.
இந்த ஆலைகளில் இருந்து தான், அதிகளவில் மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இதில், மிகப்பெரிய அளவில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடப்பதாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதையடுத்து, கடந்த 6ம் தேதியில் இருந்து, தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமானதாக கூறப்படும் மதுபான தயாரிப்பு நிறுவனம், தி.மு.க., முக்கிய புள்ளிகளுக்கு வேண்டிய எஸ்.என்.ஜெயமுருகன் உள்ளிட்டோரின் மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், ஆலைகள் மற்றும் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உட்பட, 25 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதற்கு முன்னதாக, டாஸ்மாக் ஊழல் குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்துள்ள, 35 வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர். அதேபோல், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மட்டும், 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி, கலால் வரி ஏய்ப்பு உட்பட ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர்.
சோதனை தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை:
'டாஸ்மாக்' தலைமை அலுவலகத்தில், அதிகாரிகள் பணியிட மாற்றம், மதுபான ஆலைகளில் இருந்து, குடோன் மற்றும் சில்லரை விற்பனை கடைகளுக்கு பாட்டில்களை எடுத்து செல்வதற்கான வாகன போக்குவரத்து டெண்டர், மதுக்கூடம் உரிமம் வழங்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில், மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. மதுக் கடைகளில் லஞ்சம் பெறப்பட்டுள்ளது.
மதுபான ஆலை அதிபர்களுக்கு ஆதரவாக, டாஸ்மாக் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். டாஸ்மாக் அதிகாரிகள் உதவியுடன், ஒரு பாட்டிலுக்கு, 10 - 30 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அதேபோல, டாஸ்மாக் வாகன போக்குவரத்து டெண்டரிலும், மிகப்பெரிய அளவில் மோசடி நடந்துள்ளது.
போக்குவரத்து டெண்டர் தொடர்பாக, விண்ணப்பத்தாரர்கள் அளித்த வரைவோலைகளுடன், அவர்களின் சுயவிபர குறிப்புகள் பொருந்தவில்லை. ஏலம் எடுத்தவர், குறிப்பிட்ட காலத்திற்குள், 'டிடி' தரவில்லை. மேலும், ஒருமுறை மட்டுமே விண்ணப்பித்த நபருக்கு, டெண்டர் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் போக்குவரத்து டெண்டருக்கு மட்டுமே, டாஸ்மாக் நிறுவனம் ஆண்டுதோறும், 100 கோடி ரூபாய்க்கு வழங்குவதும், அதில் மோசடி நடந்துள்ளதும் கண்டறியப்பட்டு உள்ளது. டெண்டர் முறைகேடு தொடர்பாக, மதுபான நிறுவனங்களின் அதிபர்கள், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் இடையே நேரடி பேச்சு நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன.
எஸ்.என்.ஜே., கால்ஸ், எஸ்.ஏ.ஐ.எப்.எல்., மற்றும் ஷிவா மதுபான நிறுவனங்கள், தேவி பாட்டில்ஸ், கிரிஸ்டல் பாட்டில்ஸ், ஜி.எல்.ஆர்., ேஹால்டிங் ஆகிய நிறுவனங்களில், பாட்டில்கள் கொள்முதல் செய்ததிலும் நிதி மோசடி நடந்துள்ளது. சட்ட விரோத கட்டணங்கள், கணக்கில் வராத வகையில் நிதி பரிமாற்றம் நடந்துள்ளது. அதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
மதுபான நிறுவனங்கள் திட்டமிட்டு செலவுகளை உயர்த்தி காட்டியும், பாட்டில் நிறுவனங்கள் வாயிலாக போலி கொள்முதல் செய்வது போல காட்டியும் கணக்கில் வராத வகையில், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது.
இந்த மோசடியில் பாட்டில் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. நிதி ஆவணங்கள், திட்டமிட்ட வரி ஏய்ப்பு வாயிலாக மதுபான நிறுவனங்களும், பாட்டில் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.