UPDATED : ஜூலை 24, 2024 04:17 AM
ADDED : ஜூலை 24, 2024 01:28 AM

சென்னை:தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 2,200 ரூபாய் சரிந்து, 52,400 ரூபாய்க்கு விற்பனையானது. இது, வரும் நாட்களில் மேலும் குறையலாம்.
இம்மாதம் 17ம் தேதி, சவரன் விலை 55,360 ரூபாயாக அதிகரித்தது. பின், விலை சற்று குறைந்தது. நேற்று முன்தினம் சவரன், 54,600 ரூபாய்க்கும், நேற்று காலை 54,480 ரூபாய்க்கும் விற்பனையானது. கிராம் வெள்ளி, 95.60 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டை காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்த நிதி அமைச்சர், தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை, 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைப்பதாக அறிவித்தார்.
அடுத்த சில நிமிடங்களில் தங்கம் விலை கிராமுக்கு, 275 ரூபாய் குறைந்து 6,550 ரூபாய்க்கு வந்தது. சவரனுக்கு அதிரடியாக, 2,200 சரிந்து, 52,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 3.10 ரூபாய் குறைந்து, 92.50 ரூபாய்க்கு விற்பனையானது.
நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், 'இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், சர்வதேச சந்தையில் தங்கம் விலை என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, அதே விலைக்கு தான் நம் நாட்டிலும் விற்கப்படும். இதனால், தங்கம் கடத்தி வருபவர்களுக்கு லாபம் இருக்காது என்பதால், இனி தங்க கடத்தல் நடக்காது' என்றார்.

