'மாஜி' கவுன்சிலர் வங்கி கணக்கில் ரூ.32 லட்சம் 'கிரெடிட்' உத்தரகண்ட் ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை
'மாஜி' கவுன்சிலர் வங்கி கணக்கில் ரூ.32 லட்சம் 'கிரெடிட்' உத்தரகண்ட் ஆன்லைன் மோசடி கும்பல் கைவரிசை
ADDED : மே 29, 2024 01:04 AM

சென்னை:சென்னை எண்ணுார் சத்தியவாணி முத்து நகர், 13வது தெருவை சேர்ந்தவர் மதியழகன், 56. கத்திவாக்கம் நகராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர், அ.ம.மு.க., வடசென்னை மாவட்ட துணை செயலராக உள்ளார்.
இவர், எண்ணுார் காமராஜ் நகரிலுள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளையில் கணக்கு வைத்துள்ளார். தன் மகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த, 70,000 ரூபாய் பணம் எடுக்க, இம்மாதம், 21ம் தேதி, வங்கி கிளைக்கு சென்றுள்ளார்.
முடக்கம்
ஆனால், வங்கி மேலாளர் உங்களது வங்கி கணக்கில் பணம் எடுக்க முடியாது; வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது என்று கூறவே மதியழகன் அதிர்ச்சியடைந்தார்.
மேலும், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆன்லைன் மோசடி கும்பல், வேறு ஒரு வங்கி கணக்கிலிருந்த, 31 லட்சத்து 90,000 ரூபாய் பணத்தை திருடி, மதியழகன் வங்கி கணக்கில் செலுத்தியதும் தெரிய வந்தது.
இதுகுறித்து உத்தர கண்ட் போலீசார், சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு, சென்னை எண்ணுார் கிளையில் கணக்கு வைத்துள்ள மதியழகன் வங்கி கணக்கை முடக்க வேண்டும் என கடிதம் அனுப்பி உள்ளனர்.
அதன் அடிப்படையில் இவரது வங்கி கணக்கு தற்போது முடக்கப்பட்டது. இதனால், தன் மகளின் படிப்பிற்கு கல்வி கட்டணம் செலுத்த பணம் எடுக்க முடியாமல் மதியழகன் தவித்து வருகிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மதியழகன் கூறியதாவது:
என் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, எண்ணுார் கிளை வங்கி கணக்கில், 92,600 ரூபாய் வங்கி இருப்பு இருந்தது. மகளுக்கான பள்ளி கட்டணம் கட்ட, 21ம் தேதி பணம் எடுக்க எண்ணுார் கிளைக்கு சென்றேன்.
அப்போது, என் வங்கி கணக்கில், 20ம் தேதி, 31 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை, ஆன்லைன் மோசடி கும்பல் செலுத்தியது தெரியவந்தது.
மன உலைச்சல்
என் கணக்கில் யாரோ பணம் செலுத்தினால், நான் என்ன செய்ய முடியும்? என் வங்கி கணக்கில் உள்ள என் பணத்தையும் எடுக்க முடியாமல், மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.
கடந்த எட்டு நாட்களாக வீட்டிற்கும், வங்கிக்குமாக, நான் அலைந்து வருகிறேன். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இதுபோன்ற நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது.
எனவே, வங்கி அதிகாரிகளின் அலட்சியப் போக்கை கண்டித்து, இன்று காலை 10:00 மணிக்கு வங்கி முன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளேன்.
இவ்வாறு கூறினார்.