ADDED : மே 06, 2024 11:31 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெண்ணின் பூர்வீக சொத்தை பட்டா மாறுதல் செய்வதற்கு ரூ.3500 லஞ்சம் வாங்கிய சர்வேயரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் ஓம்சக்தி நகரை சேர்ந்தவர் திருநாவுக்கரசு 53. இவரது மனைவி செந்தாமரையின் பூர்வீக சொத்தை பாகப்பிரிவினை செய்து பட்டா மாறுதல் வழங்க ஆன் -லைனில் விண்ணப்பம் செய்திருந்தார்.
ராமநாதபுரம் தாலுகா சர்வேயராக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் சிவா 35, என்பவரிடம் இது குறித்து நடவடிக்கை எடுக்க தெரிவித்துள்ளார். ஆவணங்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.3500 ரூபாய் லஞ்சம் வேண்டும் என சிவா கேட்டுள்ளார். திருநாவுக்கரசு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ராமச்சந்திரனிடம் புகார் அளித்தார். இதையடுத்து ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை திருநாவுக்கரசிடம் கொடுத்தனர்.
திருநாவுக்கரசு சர்வேயர் சிவாவை தொடர்பு கொண்டு பணத்தை தருவதாக கூறினார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்திற்கு வருமாறு சிவா தெரிவித்தார். அங்கு சிவாவிடம் பணம் வழங்கிய போது போலீசார் கைது செய்தனர்.