ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி வீட்டில் 'ரெய்டு'
ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம் பா.ஜ., நிர்வாகி வீட்டில் 'ரெய்டு'
ADDED : மே 08, 2024 12:23 AM
சென்னை:நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கூறப்படும், 4 கோடி ரூபாய் விவகாரம் தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி வீடு மற்றும் ஹோட்டலில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர், 4 கோடி ரூபாயை கைப்பற்றினர். இந்த பணம், திருநெல்வேலி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்றும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். தற்போது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். பணம் எடுத்துச் சென்ற சென்னையைச் சேர்ந்த நவீன், சதீஷ் மற்றும் துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த பெருமாள் ஆகியோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றுஉள்ளனர்.
அதன் அடிப்படையில், நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் மற்றும் முருகனிடம் பணியாற்றி வரும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோரிடமும் விசாரித்துள்ளனர்.
அப்போது, ரயிலில் பிடிபட்ட பணம், சென்னை நீலாங்கரையில் வசித்து வரும் பா.ஜ., தொழில் பிரிவு நிர்வாகி கோவர்த்தனன், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் நடத்தி வரும் ஹோட்டலில் இருந்து கைமாறி இருப்பது தெரியவந்துஉள்ளது.
இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் நேற்று, கோவர்த்தனன் வீடு மற்றும் ஹோட்டலில் சோதனை நடத்தினர்.

