அய்யனார் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம், வெள்ளிக்கவசம் கொள்ளை
அய்யனார் கோயிலில் உண்டியலை உடைத்து ரூ.6 லட்சம், வெள்ளிக்கவசம் கொள்ளை
ADDED : ஜூலை 01, 2024 03:02 AM

உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை அய்யனார் கோயில் உண்டியலை உடைத்து ரூ. 6 லட்சம் மற்றும் 5 கிலோ எடை கொண்ட வெள்ளிக்கவசத்தை கொள்ளையடித்து மிளகாய் பொடியை வீசி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
உத்தரகோசமங்கை அருகே ஆலங்குளத்தில் பெரிய கருத்தார் உடையார் அய்யனார் கோயில் உள்ளது. செவ்வாய், வெள்ளியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் வந்து கிடா வெட்டி தரிசனம் செய்து செல்வர்.
நேற்று முன் தினம் இரவு பூஜாரி ராதாகிருஷ்ணன் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் கோயிலை திறந்து பார்த்த போது உண்டியல் மற்றும் கோயில் அலுவலகத்தில் இருந்த பீரோ உள்ளிட்டவை உடைக்கப்பட்டிருந்தது.
உண்டியலில் இருந்த பணம், சுவாமிக்கு சாத்த வைத்திருந்த 5 கிலோ எடையுள்ள வெள்ளிக்கவசம் ஆகியவை கொள்ளை போயிருந்தன.
கீழக்கரை போலீசார் மற்றும் தடவியல் நிபுணர் குழு உண்டியல் மற்றும் கோயிலில் பதிவான கைரேகைகளை சேகரித்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மர்ம நபர்கள் மதில் சுவர் மீது ஏறி குதித்து கோயிலுக்குள் அலுவலகத்தில் இருந்த பீரோவை உடைத்துள்ளனர்.
அதில் இருந்த உண்டியல் சாவியை எடுத்து பீரோவில் இருந்த ரூ. 2 லட்சம் மற்றும் உண்டியலில் இருந்த ரூ.4 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர். மேலும் கோயிலை சுற்றி வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவாகும் 'ஹார்ட் டிஸ்க்' உள்ளிட்டவைகளையும் எடுத்துள்ளனர். பிறகு சுவாமி சன்னதி கதவை உடைத்து பெரிய உண்டியலை திறந்து அதிலிருந்த பணத்தையும் எடுத்துள்ளனர். எளிதில் தடயங்கள் சிக்கி விடாமல் இருக்க மிளகாய் பொடியையும் கொள்ளையர்கள் வீசி சென்றது தெரிய வந்துள்ளது.
உண்டியல் சாவி இருக்குமிடம் தெரிந்த நபர் ஒருவர் துணையுடன் இக்கொள்ளை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.