ADDED : ஏப் 27, 2024 12:45 AM
சென்னை:சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், 3.99 கோடி ரூபாய் சிக்கியது தொடர்பான வழக்கு விசாரணை, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில், சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படையினர், 3.99 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, தாம்பரம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
பிடிபட்ட பணம், லோக்சபா தேர்தலில், நெல்லை தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக, சென்னையில் உள்ள அவரது ஹோட்டல் ஊழியர்கள், உறவினர்களிடம் விசாரித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, நயினார் நாகேந்திரனுக்கு இரண்டு முறை, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. அவரது உதவியாளர் மணிகண்டன் என்பவருக்கும் போலீசார், 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நேற்றுஉத்தரவிட்டுள்ளார்.

