தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,286 கோடி 5 புதிய திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே!
தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.9,286 கோடி 5 புதிய திட்டங்களுக்கு தலா ரூ.1,000 மட்டுமே!
ADDED : ஆக 16, 2024 01:30 AM
சென்னை:மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ஒதுக்கியுள்ள, 9,286 கோடி ரூபாய் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியல், நேற்று வெளியாகி உள்ளது. புதிய இரட்டை பாதை திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு, 9,048 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போதைய மத்திய பட்ஜெட்டில், சற்று கூடுதலாக தெற்கு ரயில்வேக்கு, 9,286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த பட்டியலை, 'பிங்க் புக்' வாயிலாக, ரயில்வே வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. குறிப்பாக, புதிய பாதை திட்டங்களுக்கு, 301 கோடி; அகலப்பாதை திட்டங்களுக்கு, 478 கோடி; இரட்டை பாதை திட்டங்களுக்கு, 1,928 கோடி; ரயில் தண்டவாளங்கள் புதுப்பிப்புக்கு, 1,755 கோடி; மின்மயமாக்கல் பணிக்கு, 156 கோடி; சுரங்கம் மற்றும் மேம்பால பணிக்கு, 534 கோடி; சிக்கனல் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு, 511 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதற்கு முந்தை இடைக்கால மத்திய பட்ஜெட்டில், புதிய பாதை திட்டங்களுக்கு, 976 கோடி ரூபாயும், இரட்டை பாதை திட்டங்களுக்கு, 2,214 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. தற்போது, இந்த நிதி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால், புதிய மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதுார் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி; திண்டிவனம் - திருவண்ணாமலை; அத்திப்பட்டு - புத்துார்; ஈரோடு - பழனி; சென்னை - கடலுார் - புதுச்சேரி போன்ற புதிய ரயில்பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், மேற்கண்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம், கேரளா, மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் ஒரு பகுதியை கொண்டுள்ள தெற்கு ரயில்வேக்கு, இடைக்கால பட்ஜெட்டில், 9,048 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, 9,286 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி ஒதுக்கியதால் பணிகள் தாமதமின்றி நடக்கும்.
புதிய மற்றும் இரட்டை பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தாலும், அகலப்பாதை மற்றும் மின்மயமாக்கல் திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய பாதை முடங்கும்
“தெற்கு ரயில்வேயில், 10 ஆண்டுகளில் புதிய பாதை திட்டங்கள் எதுவும் முடிக்கப்படவில்லை; முடிக்கும் தருவாயிலும் இல்லை. அதற்கு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததே காரணம். இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியையும், மத்திய பட்ஜெட்டில் குறைத்து ஒதுக்கி இருப்பதால், புதிய பாதை திட்டங்கள் முடங்கும்.
மனோகரன்,
முன்னாள் தலைவர்,
டி.ஆர்.இ.யூ., ரயில்வே தொழிற்சங்கம்.

