தி.மு.க., போட்ட பிச்சையால் தான் இன்று நாய் கூட பட்டம் பெறுகிறது ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு
தி.மு.க., போட்ட பிச்சையால் தான் இன்று நாய் கூட பட்டம் பெறுகிறது ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை பேச்சு
ADDED : ஜூலை 04, 2024 01:34 AM
சென்னை:'நீட்' தேர்வை ரத்து செய்யக் கோரி, தி.மு.க., மாணவரணி சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன், மாணவர் அணி செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
நீட் தேர்வு நோக்கமே நம்மை அழிக்கத் தான். ஒரு காலத்தில் தி.மு.க., மட்டும் பேசிக் கொண்டிருந்த நீட் தேர்வு எதிர்ப்பை, இன்று அனைத்து கட்சிகளும் பேசி வருகின்றன.
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது. குலம், கோத்திர பெருமையால் டாக்டர்கள் உருவாகவில்லை.
ஜாதிவாரி ஒதுக்கீட்டால் தான், எங்களில் பலர் டாக்டர்கள் ஆகியுள்ளனர். எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள், திராவிட இயக்கம் போட்ட பிச்சை; அதனால் தான் இன்று, நாய் கூட பி.ஏ., பட்டம் பெறுகிறது.
இவ்வாறு பேசினார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சமூக வலைதளங்களில் தி.மு.க.,வுக்கு எதிராக விமர்சனங்கள் பாய்ந்தன.
அதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி அளித்த விளக்கம்:
நாய் கூட பி.ஏ., பட்டம் பெறுகிறது என நான் பேசியதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. அது ஒரு உதாரணத்திற்காகத் தான் பேசினேன். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தில் இருப்பவர்கள் படித்து முன்னேறியதற்கு, இட ஒதுக்கீடும், அதற்கான போராட்டத்தை நடத்திய திராவிட இயக்கமும் தான் காரணம்.
ஒரு காலத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்த கல்வி, இப்போது எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது என்றால் காரணம், திராவிட இயக்கம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.