ADDED : ஆக 20, 2024 08:03 PM
சென்னை:''தமிழக ரயில்வே திட்டங்களுக்கு, மத்திய அரசு 1,000 ரூபாய் வழங்கியதை கண்டித்து, வரும் 23ல், 1,001 ரூபாயை, பிரதமர், மத்திய நிதி அமைச்சர், ரயில்வே அமைச்சருக்கு அனுப்பி வைக்கும் போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட சில ரயில்வே திட்டங்களுக்கு, 1,000 ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. இதை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில், வரும் 23ம் தேதி, 1,001 ரூபாயை, அனைத்து மாவட்ட தலைவர்களும், தமிழக மக்களும் பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர், ரயில்வே துறை அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் போராட்டத்தை நடத்துகிறோம்.
கருணாநிதிக்கு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து நாணயம் வெளியிட்டுள்ளது. கருணாநிதிக்கு யார் யாரெல்லாம் பாராட்டு தருகிறார்களோ, அதை நாங்கள் வரவேற்கிறோம். இதில் அரசியல் கிடையாது.
இவ்வளவு காலமாக, கருணாநிதி மீது வசைபாடி குற்றங்கள் வைத்த பா.ஜ.,வினர் இனிமேலாவது திருந்தி, அவற்றை திரும்ப பெற வேண்டும். பா.ஜ.,வை எதிர்க்கும் கூட்டணியில் தான் தி.மு.க., எப்போதும் இருக்கும். எக்காரணத்துக்காகவும் பா.ஜ.,வை ஆதரிக்கும் நிலைப்பாட்டை தி.மு.க., எடுக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
***