ADDED : மார் 25, 2024 05:25 AM
சென்னை : லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதி ஏற்படுத்துவதற்காக, 8.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, ஓட்டுச்சாவடிகளில் சாவடி எண் எழுதுவது, அப்பகுதியைச் சுற்றி 200 மீட்டர் பகுதியில் எல்லைக் கோடு வரைவது, குடிநீர் வசதி ஏற்படுத்துவது, தடுப்புகள் அமைப்பது, மின்சார வசதி, நாற்காலிகள் வசதி ஏற்படுத்துவது போன்ற பணிகளை, கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்கின்றனர்.
இப்பணிக்கு வழங்கப்பட்ட 1,000 ரூபாய், கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது 1,300 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இம்முறை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம், அரசுக்கு கோரிக்கை விடுத்தது.
இதை பரிசீலனை செய்த அரசு, ஏற்கனவே வழங்கப்பட்ட 1,300 ரூபாயை, இம்முறையும் வழங்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 68,144 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இவற்றுக்கு தலா 1,300 ரூபாய் வழங்க, 8.86 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் கட்டமாக 50 சதவீதம் அதாவது ஓட்டுச்சாவடிக்கு 650 ரூபாய் வீதம், 4.42 கோடி ரூபாய் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு வெளியிட்டுள்ளார்.

