ADDED : ஏப் 22, 2024 06:18 AM

சென்னை : 'தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை, தேர்தல் கமிஷன் தளர்த்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், ஜூன் 4 வரை தேர்தல் நடத்தை விதிகள் தொடரும் என, தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு, எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதைத் தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.
மற்ற மாநிலங்களில் ஓட்டுப்பதிவு முடியும் வரை, தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து வாட தேவையில்லை.
நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது, ஆட்சியாளர்கள் புதிய திட்டங்களை அறிவிக்க முடியாது. மக்களின் அன்றாட பிரச்னைகளை தீர்க்க, அதிகாரிகளுக்கு எந்தவித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது.
அதிகாரிகளுடன் முதல்வரோ, அமைச்சர்களோ, ஆய்வுக்கூட்டங்களை கூட நடத்த இயலாது. மொத்தத்தில் அரசு நிர்வாகம், செயல்பட முடியாத அளவில் முடக்கப்படும். இதனால் மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக்கூட, அரசால் செய்ய முடியாது.
தேர்தல் நடத்தை விதிகளால், வணிகர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சில்லரை வணிகம் செய்யும் வணிகர்கள், அதில் கிடைத்த பணத்தை சந்தைக்கு கொண்டு சென்றுதான், தேவையான பொருட்களை வாங்கி வருவர்.
அவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும்போது, பறக்கும் படையினர், 50,000 ரூபாய்க்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் பறிமுதல் செய்கின்றனர்.
இதனால் ஒரு மாதத்திற்கும் மேலாக, வணிகர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மேலும், 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றது.
எனவே, தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், மாநிலம் முழுதும் தேர்தல் நடத்தை விதிகளை, உடனடியாக தளர்த்த வேண்டும்.
இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

