ADDED : ஜூன் 21, 2024 01:19 AM

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாவது:
இந்த ஆட்சியில் கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம், கலெக்டர் மற்றும் எஸ்.பி., உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் உள்ள பகுதியிலேயே சாராய விற்பனை நடந்துள்ளது. இச்சம்பவத்திற்கு பின், ஆளுங்கட்சி கும்பல் உள்ளது.
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்தனர். அப்போது, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அதிகார பலமிக்கவரின் ஆதரவோடு தான் சாராய விற்பனை நடந்தது. தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக திகழ்கிறது.
கள்ளச்சாரயம் ஆறுபோல ஓடுகிறது. சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்காக சென்னையில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்து உயர்தர சிகிச்சை அளித்திருந்தால் பலரை காப்பாற்றி இருக்கலாம். மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு.
சாராயம் அருந்தியதால் தான் இறந்ததாக பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், வயிற்றுப் போக்கு, வயது மூப்பு, வலிப்பு ஏற்பட்டு இறந்ததாக கலெக்டர் நேற்று முன்தினம் தெரிவிக்கிறார்.
அரசுக்கு முட்டு கொடுக்கும், இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும் போது, ஏழை மக்களுக்கு எங்கே நீதி கிடைக்கும்? மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேவையான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மருத்துவ கருவிகள் இல்லை. குறிப்பாக, சாராய விஷத்தை முறிக்கும் மருந்து தமிழகத்தில் எந்த மருத்துவமனைகளிலும் இல்லை.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி இறந்துள்ளனர். பெற்றோரை இழந்து வாடும் அவரது மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அ.தி.மு.க., ஏற்கும்.
அவர்களுக்கு அடுத்த, 10 ஆண்டுகளுக்கு மாதந்தோறும், 5,000 ரூபாய் வழங்கும். சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 10 லட்சத்தை உயர்த்தி, 25 லட்சமாக வழங்குவதுடன், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

