கள் இறக்கும் விவசாயிகள் டி.எஸ்.பி., ஆபீசில் முற்றுகை
கள் இறக்கும் விவசாயிகள் டி.எஸ்.பி., ஆபீசில் முற்றுகை
ADDED : ஜூன் 23, 2024 09:42 AM

பொள்ளாச்சி : கள் இறக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்வதை கண்டித்து, நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டனர். சங்க மாநில தலைவர் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராய பிரச்னையை தொடர்ந்து, இரண்டு நாட்களாக கள் இறக்கும் விவசாயிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களில், கள் இறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கள் இறக்க தடை நீக்கும் வரை போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.டாஸ்மாக், கள்ளச்சாராயம் இரண்டையும் நிறுத்தி விட்டு, கள் இறக்க அனுமதிக்க வேண்டும். தோட்டம், தோட்டமாக போலீசார் வந்து மிரட்டினால், காந்தி சிலை அருகே ஆடு, மாடுகளுடன் வந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதையடுத்து, டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் பேச்சு நடத்தி, உயர் அதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கை தெரிவிக்கப்படும், என, கூறியதையடுத்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தை முற்றுகையிட விவசாயிகள் ஊர்வலமாக வந்தனர். அப்போது, வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன், கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடிக்க முயற்சித்தார். இதைக்கண்ட போலீசார், அவரை தடுத்து பூச்சி மருந்தை கைப்பற்றினர்.
அப்போது, விவசாயி, 'சுதந்திரமாக விவசாயம் செய்ய முடியவில்லை. கள் இறக்கியதற்காக தினமும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
என் மீது மொத்தம், 40 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். நிம்மதியே இல்லாத நிலை உள்ளது. தமிழகத்தில் விவசாயிகளுக்கு பாதுகாப்பும் இல்லை; நிம்மதியும் இல்லை' என்றார். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

