பாம்புகளை கழுத்தில் சுற்றி சிவபெருமானாக மாறிய சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர்
பாம்புகளை கழுத்தில் சுற்றி சிவபெருமானாக மாறிய சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடை உரிமையாளர்
ADDED : செப் 12, 2024 07:01 AM

சென்னை : கோவில் திருவிழாவுக்கு சென்ற இடத்தில், பாம்புகளை தலையில் சுற்றி, சிவபெருமான் போல மாறியதால், சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடைக்காரர் மீது, வனத்துறை வழக்கு பதிய, முன்ஜாமின் பெறும் அளவுக்கு சிக்கலை சந்தித்துள்ளார்.
சேலம் மாவட்டம், இடைப்பாடி ஆலச்சம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன், 53. இளம் வயதில் தாயை இழந்து, தந்தையும் மதுவுக்கு அடிமையானதால், உள்ளூரில் டீ கடையில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதன்பின், 13 வயதில் சென்னைக்கு வந்து, பழக்கடையில் வேலை பார்த்தார். 1995ல், பாசுமதி அரிசியால் பிரியாணி செய்து, தள்ளு வண்டி கடையில் விற்க துவங்கினார்.
தாம்பரத்தில், சேலம் ஆர்.ஆர்.பிரியாணி கடையை துவங்கிய தமிழ்ச்செல்வன், தற்போது, 23 கிளைகளுக்கு சொந்தக்காரர். சினிமாவில் நடிக்கும் அளவுக்கு விளம்பர மோகம் கொண்டவர்.
இவர், ஆக.,15ல், சொந்த ஊரில் நடந்த கோவில் திருவிழா மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் நடத்திய நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், பாம்பு ஒன்றை எடுத்து தமிழ்ச்செல்வனிடம் காட்டியுள்ளார். அதை ஆர்வமாக வாங்கி கையில் வைத்துக் கொண்டார்.
கூட்டத்தில் இருந்த மற்றவர்கள், 10க்கும் மேற்பட்ட பாம்புகளை எடுத்துக்காட்டவே, அதை தமிழ்செல்வன் கழுத்தில் சூடி, சிவபெருமான் போல மாறினார். இந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியது.
இதை பார்த்த சேலம் மாவட்டம், மேட்டூர் வனத்துறை அதிகாரிகள், விளக்கம் கேட்டு, தமிழ்ச்செல்வனுக்கு, 'சம்மன்' அனுப்பினர். அதன்பின்தான் விபரீதம், தமிழ்ச்செல்வனுக்கு புரிந்தது. தமிழ்செல்வன் மீது, வன உயிர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாம்புகளை கழுத்தில் சூடியதால், வனத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு ஆளாகி சிக்கலை சந்தித்த தமிழ்ச்செல்வனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி இருப்பதால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.