ADDED : ஜூலை 04, 2024 10:27 PM
சென்னை:கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் செமஸ்டர் தேர்வுக்கான கால அட்டவணை, முன்கூட்டியே வெளியிடப்பட்டுள்ளது.
கலை அறிவியல் சார்ந்த, 10 அரசு பல்கலைகள், அவற்றின் இணைப்பு கல்லுாரிகள் ஆகியவற்றில், செமஸ்டர் தேர்வுகள், ஒவ்வொரு தேதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால், ஒரு பல்கலையில் தேர்வு முடிக்கும் மாணவர், அங்கு அடுத்த கட்ட படிப்பில் எளிதாக சேர்ந்து விடுகிறார்.
இன்னொரு பல்கலையில் தேர்வு நடக்க தாமதமாவதால், அந்த பல்கலை மாணவர், வேறு பல்கலையின் உயர் படிப்பில் சேர தாமதமாகி, சேர்க்கை கிடைக்காத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒவ்வொரு பல்கலையிலும், தனித்தனி தேர்வு அட்டவணையை பின்பற்றுவதால், பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் இணைந்து, பிற நிகழ்ச்சிகளை நடத்த முடியவில்லை.
இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, மாநிலம் முழுதும் ஒரே தேதி மற்றும் கால அட்டவணைப்படி, கல்லுாரி, பல்கலை தேர்வுகளை நடத்த, உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டில் கலை அறிவியல் கல்லுாரிகள் மற்றும் கலை அறிவியல் சார்ந்த, 10 அரசு பல்கலைகளிலும், தேர்வு, பாட வகுப்புகள் தொடர்பான உத்தேச அட்டவணையை, கல்லுாரி கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, தற்போது புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை துவங்கியுள்ள கல்லுாரிகள், நவ., 4ல் செமஸ்டர் தேர்வுகளை துவங்கி, நவ., 30க்குள் முடிக்க வேண்டும். தேர்வு முடிவுகளை, டிச., 21க்குள் வெளியிட வேண்டும்.
மீண்டும் டிச., 4ல் அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகளை துவங்கி, ஏப்., 11ல் முடிக்க வேண்டும். ஆண்டின் இறுதி செமஸ்டர் தேர்வை, ஏப்., 15ல் துவங்கி, மே 10க்குள் முடிக்க வேண்டும். மே 31க்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என, அந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.