சந்தீப் ராய் ரத்தோட் மாற்றம்; போலீஸ் கமிஷனர் அருண்
சந்தீப் ராய் ரத்தோட் மாற்றம்; போலீஸ் கமிஷனர் அருண்
ADDED : ஜூலை 09, 2024 04:10 AM

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
டி.ஜி.பி., ரேங்க் ஐ.பி.எஸ்., அதிகாரியான சந்தீப் ராய் ரத்தோட், சென்னை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். அவர், செங்கல்பட்டு மாவட்டம் ஊனமாஞ்சேரியில் உள்ள, போலீஸ் அகாடமியின் இயக்குனராக மாற்றப்பட்டார்.
அதேபோல, மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக இருந்த அருண், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
டி.ஜி.பி., அலுவலகத்தில், தலைமையிடத்து கூடுதல் டி.ஜி.பி.,யாக பணிபுரிந்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநில சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர் அமுதா நேற்று பிறப்பித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனராக பொறுப்பேற்ற பின், அருண் கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கு பிரச்னை, குற்றத் தடுப்பு, ரவுடியிசம் ஒழிப்பு உள்ளிட்ட பணிகளுடன், போக்குவரத்து தொடர்பான சிக்கல்களுக்கும் தீர்வு காணப்படும்.
காவல் துறையில் உள்ள ஊழல் மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதும், என் முதன்மையான கடமையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

