ஞானத்தை கற்று தரும் மொழி சமஸ்கிருதம் கவர்னர் ரவி பெருமிதம்
ஞானத்தை கற்று தரும் மொழி சமஸ்கிருதம் கவர்னர் ரவி பெருமிதம்
UPDATED : ஆக 20, 2024 10:31 AM
ADDED : ஆக 20, 2024 04:19 AM

சென்னை: ''ஞானத்தை கற்று தரும் மொழி சமஸ்கிருதம். அத்தகைய மொழியை அழியாமல் பாதுகாக்க வேண்டும்,'' என, கவர்னர் ரவி பேசினார்.
சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் நடந்த சமஸ்கிருத தின விழாவில், கவர்னர் ரவி பேசியதாவது:
சமஸ்கிருத மொழியை கற்று தருபவர்கள், நாட்டிற்கு சிறந்த சேவையை செய்து வருகின்றனர். ரிஷிகள் நமக்கு மிக அழகிய இரு பரிசுகளை தந்தனர். ஒன்று ஒளி, மற்றொன்று மொழி.
வேற்றுமையாக பல விஷயங்களை, நாம் வெவ்வேறு கண்ணோட்டத்தில் பார்த்தாலும், உண்மை என்பது அனைவருக்கும் பொதுவானது. காஷ்மீர் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள பாரதத்தை, அவர்கள் உருவாக்கிஉள்ளனர்.
மொழி, உடை, உணவு போன்றவற்றில் வேறுபட்டு இருப்பினும், நாம் அனைவரும் பாரத மண்ணில் ஒரே குடும்பமாகத் தான் வாழ்கிறோம். இந்த ஒற்றுமையை தான் ரிஷிகள் நமக்கு கற்றுத் தந்துள்ளனர். ஒளியும், மொழியும் இல்லையெனில் பிரபஞ்சம் இயங்காது.
பாரதத்தின் தாயாக சமஸ்கிருதம் விளங்குகிறது. மனிதர்களின் வாழ்வியல், பிறரை எப்படி வழி நடத்துவது, சுற்றுச்சூழல் என தார்மீக வாழ்வியலை கற்றுத் தருகிறது. இந்திய தத்துவம் மற்றும் கலாசாரம் இவை இரண்டையும் யாராலும் அழிக்க முடியாது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மொழியை வளர்க்க, மொழி வல்லுனர்கள் ஒன்று சேர்ந்து கற்பிக்க வேண்டும். பாரதத்தில் பல்வேறு மொழிகள் உள்ளன. பன்முகத்தன்மையின் முகமாக நம் தேசம் விளங்குகிறது.
ஆங்கிலத்தை கொண்டு வந்து சமஸ்கிருத மொழியை அழிக்க முயன்றனர். ஆங்கிலம் படித்தால் தான் வேலை கிடைக்கும் என்ற கட்டமைப்பை ஏற்படுத்தினர்.
நாமும் ஆங்கிலம் பேசுவதை கவுரவமாக கருதி விட்டோம். சக்தி வாய்ந்த மொழி சமஸ்கிருதம். பல ஆயிரம் நுாற்றாண்டுகளுக்கு முன்னரே, நம் முன்னோர்கள் எழுதிய நுால்களில் இயற்பியல் குறித்த அறிவுசார் தகவல்களை சமஸ்கிருதம் தந்துள்ளது.
ஞானத்தை கற்று தரும் மொழி சமஸ்கிருதம். அத்தகைய மொழியை அழியாமல் பாதுகாக்க அனைவரும் பாடுபட வேண்டும். நவீன அறிவியல் மற்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு சமஸ்கிருத மொழியை கொண்டு செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், சமஸ்கிருத பாரதி அமைப்பு பொதுச்செயலர் அம்ரிதா பிரித்வி, தலைவர் ஜெயதேவ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன், மத்திய சமஸ்கிருத பல்கலை துணைத் தலைவர் ஸ்ரீநிவாஸ் வரகெடி ஆகியோர் பங்கேற்றனர்.