சரவணன், சீசிங் ராஜா, செந்திலுக்கு வலை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்
சரவணன், சீசிங் ராஜா, செந்திலுக்கு வலை; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்
ADDED : ஜூலை 22, 2024 04:23 AM

சென்னை:: பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரே எதிர்பார்க்காத வகையில், அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆம்ஸ்ட்ராங் கூட்டாளி பாம் சரவணனை தீர்த்துக்கட்ட, சீசிங் ராஜா, சம்போ செந்தில் என்ற இரு ரவுடிகள் தருணம் பார்த்து வருவதால், அவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார், ஆந்திர மாநிலம் விரைந்துள்ளனர்.
இதுகுறித்து, தனிப்படை போலீசார் கூறியதாவது:
ஆம்ஸ்ட்ராங்கின் வலது கரமாக செயல்பட்டவர், சென்னை புளியந்தோப்பு வெங்கடேசபுரத்தை சேர்ந்த பாம் சரவணன், 41. வெடிகுண்டு வீசுவதில் இவர் கெட்டிக்காரர் என்பதால், ரவுடிகள் மற்றும் போலீசார் மத்தியில், பெயருக்கு முன்னால், 'பாம்' சேர்த்து அழைக்கப்படுகிறார்.
26 வழக்குகள்
இவர் மீது, ஆறு கொலைகள், கட்டப்பஞ்சாயத்து, ஆள் கடத்தல், அடிதடி என, 26க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
பாம் சரவணனின் அண்ணன் தென்னரசுவை தான், பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்ட செயலராக, ஆம்ஸ்ட்ராங் நியமித்தார்.
தொழில் போட்டி காரணமாக தென்னரசுவை, ரவுடி ஆற்காடு சுரேஷ் தீர்த்துக் கட்டினார்.
அதிலிருந்தே, ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோருக்கு, ஆற்காடு சுரேஷ் மற்றும் அவரது கோஷ்டியினர் பரம எதிரிகளாக மாறினர்.
தற்போது வேலுார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சென்னை வியாசர்பாடியைrf சேர்ந்த ரவுடி நாகேந்திரனுக்கும், ஆம்ஸ்ட்ராங், பாம் சரவணன் ஆகியோருக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.
கடந்த 2018ல், வியாசர்பாடி கன்னிகாபுரம் ரயில்வே கேட் பகுதியில், நாகேந்திரனின் கூட்டாளிகளை கொலை செய்ய பதுங்கி இருந்தபோது தான், பாம் சரவணன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜாமினில் வெளிவந்த பின், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரது கொலை பட்டியலில், ரவுடிகள் சீசிங் ராஜா, சம்போ செந்தில் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலர் உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் உடல், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த போது, பாம் சரவணனின் அண்ணன் மாரி, 48, வந்து பார்த்தார். அப்போதே மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அந்தளவுக்கு ஆம்ஸ்ட்ராங் மீது, பாம் சரவணன் குடும்பத்தாருக்கு விசுவாசம் உண்டு.
'ஏ பிளஸ்' ரவுடி
'ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்காமல் விடமாட்டேன்' என, பாம் சரவணன் தற்போது சபதம் எடுத்துள்ளார். கொலைக்கு பின்னணியில், வடசென்னையை சேர்ந்த ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா இருப்பதால், அவர்களின் உயிருக்கு குறி வைத்துள்ளார்.
சம்போ செந்திலும், சீசிங் ராஜாவும் பயங்கரமான ரவுடிகள் தான். செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சீசிங் ராஜா, 'ஏ பிளஸ்' பிரிவில் இடம்பெற்றுள்ள ரவுடி.
இவர் மீது, கொலை, ஆள் கடத்தல் என, 33 வழக்குகள் உள்ளன. சீசிங் ராஜாவிடம் துப்பாக்கியும் உள்ளது.
ஆற்காடு சுரேஷின் நிழல் போல செயல்பட்டு வந்தவர். அவரது கொலைக்கு பழி வாங்கியதில், சீசிங் ராஜாவும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இதற்கிடையில், ஆம்ஸ்ட்ராங் கதையை முடிக்கும் பொறுப்பை, சம்போ செந்திலிடம் ஒப்படைத்துள்ளார், வேலுார் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரன். அதன்படியே, ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டுள்ளார்.
இதனால், சம்போ செந்தில் மற்றும் சீசிங் ராஜாவை தீர்த்துக்கட்ட தருணம் பார்த்து வருகிறார் பாம் சரவணன். அடுத்து ஒரு விபரீதம் நடப்பதற்குள், மூவரையும் கைது செய்ய நாங்கள் களமிறங்கி உள்ளோம்.
தமிழக எல்லையோர பகுதிகள், ஆந்திராவில் தேடுதல் வேட்டை நடக்கிறது. ரவுடிகள் அவர்களின் கதைகளை முடிக்க தீவிரம் காட்டுவதும், நாங்கள் பிடிக்க முயல்வதும், சினிமாவில் வரும், 'கிளைமாக்ஸ்' காட்சி போல உள்ளது. ரவுடிகள் விரைவில் சிக்குவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.