'சசிகலா, தினகரன், பன்னீர் ரத்தம் குடித்த அட்டைகள்!'
'சசிகலா, தினகரன், பன்னீர் ரத்தம் குடித்த அட்டைகள்!'
ADDED : ஜூலை 12, 2024 06:00 AM

சென்னை : ''சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோர், அ.தி.மு.க., ரத்தத்தை குடித்த அட்டைகள். அவர்களை இணைத்தால் தான் கட்சி வலிமை பெறும் என்ற மாயக் கருத்தை பரப்புகின்றனர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
அவரது பேட்டி:
அ.தி.மு.க., எழுச்சியோடு வழிநடத்தப்படுகிறது. இது சிலருக்கு பிடிக்கவில்லை. ஒன்றிணைந்தால்தான் வலிமை என்ற மாயக்கருத்தை, திட்டமிட்டு திரைக்கதை, வசனம் அமைத்து உருவாக்கி உள்ளனர். அதில் எள்ளளவும் உண்மை இல்லை.
சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் ஆகியோரை, தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். தொண்டர்கள் ஏற்க முடியாத அளவுக்கு துரோகம் செய்தவர்கள். அ.தி.மு.க., ரத்தத்தை குடித்த அட்டைகள்.
சசிகலா கட்சியில் இல்லை. அவர் எப்படி கட்சியை ஒருங்கிணைக்க முடியும்?
கட்சியிலிருந்து சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் தவிர வேறு யாரும் விலகவில்லை. அ.தி.மு.க., தொண்டர்கள் பழனிசாமி தலைமையை ஏற்றுக் கொண்டு விட்டனர். பா.ஜ., கூட்டணி முடிந்த கதை. இனி கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்கள் கட்சி, தனித்தன்மையுடன் செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

