ADDED : மார் 03, 2025 05:52 AM
கள்ளிக்குடி : மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவில் விருதுநகர் மாவட்ட எல்லைக்கு அருகில் வி.டி. மணி நகரம் உள்ளது. இந்த நகரை உருவாக்கி அதே பகுதியில் மெட்ரிகுலேஷன் பள்ளியை தங்கராஜ் 58, என்பவர் நடத்தி வந்தார். பள்ளியின் தாளாளராகவும் இருந்து வந்தார்.
நேற்று தங்கராஜ், மனைவி வெங்கடேஸ்வரியுடன் விருதுநகருக்கு சென்று விட்டு இரவு 8.15 மணிக்கு மணி நகரத்தில் உள்ள தனது வீட்டிற்கு காரில் வந்தார். காரை டிரைவர் அருண்குமார் ஓட்டி வந்தார்.
விருதுநகர் மதுரை ரோட்டில் இருந்து காரை மணி நகருக்கு டிரைவர் திருப்ப முயன்ற போது மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசு பஸ் கார் மீது மோதியது.
இதில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். காரின் பின்னால் அமர்ந்திருந்த வெங்கடேஸ்வரி 55, டிரைவர் அருண்குமார், பஸ்சில் வந்த கல்லுாரி மாணவி ஒருவர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் மீட்டு விருதுநகர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
விபத்தால் மதுரை விருதுநகர் நான்கு வழிச்சாலையில் இரண்டு கிலோ மீட்டர் துாரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர்.

